தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பங்களாதேஷ் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது.
ஜிம்பாப்வே அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தற்போது பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சில நாட்களுக்கு முன்பாக பங்களாதேஷ் சியால்கட் மைதானத்தில் தொடங்கியது. மேலும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் சுருண்ட பங்களாதேஷ்
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த பங்களாதேஷ் அணிக்கு முதல் இன்னிங்ஸில் மோமினுல் ஹக் 105 பந்துகளில் 56 இடங்கள், கேப்டன் நஜ்முல் சாந்தோ 69 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் 61 ஓவரில் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஜிம்பாப்வே தரப்பில் பந்துவீச்சில் முசரபாணி மற்றும் மசகட்சா இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஜிம்பாப்வே அணி 80.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்து 82 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணிக்கு பேட்டிங்கில் பிரையன் பென்னட் 64 பந்தில் 57 ரன்கள், சீன் வில்லியம்ஸ் 108 பந்தில் 59 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் பந்துவீச்சில் மெகதி ஹசன் மிராஸ் 5 விக்கெட் கைப்பற்றினார்.
ஜிம்பாப்வே அணி அசத்தல் வெற்றி
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணி 79.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் எடுத்தது. கேப்டன் நஜ்முல் சாந்தோ 105 பந்துகளில் 60 ரன்கள், ஜாகேர் அலி 111 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்கள். ஜிம்பாப்வே தரப்பில் முசரபாணி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கடுத்து 174 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி இறுதியாக ஏழு விக்கெட் இழப்புக்கு 50.1 ஓவரில் இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே பேட்டிங்கில் பிரையன் பென்னட் 81 பந்தில் 54 ரன்கள், பென் கரன் 75 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். பங்களாதேஷ் பந்துவீச்சில் மெகதி ஹசன் மிராஸ் மீண்டும் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : இனி பாகிஸ்தானுடன் எந்த வித கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க கூடாது.. முன்னாள் ஆர்சிபி வீரர் கருத்து
இந்த நிலையில் பங்களாதேஷ் அணி சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் சென்று டெஸ்ட் தொடரை வென்றது. அப்படிப்பட்ட பங்களாதேஷ் அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து ஜிம்பாப்வே அணி வென்று இருக்கிறது. ஜிம்பாப்வே அணியே வெல்லும் அளவுக்கு இருக்கும் பங்களாதேஷ் அணியிடம் பாகிஸ்தான் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது என ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்!






