பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாவேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தான் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிறப்பான வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
பாகிஸ்தான் ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி
பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் களம்பிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் மருமனி ஓரளவு விளையாடி 29 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிதாக விளையாடாமல் விக்கெட்டுகளை விரைவில் இழந்தனர்.
இந்த சூழ்நிலையில் மிடில் வரிசையில் சீன் வில்லியம்ஸ் 23 ரன்களும், சிக்கந்தர் ராசா 56 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 39 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய கடைசி வரிசை பேட்ஸ்மேன் ங்கவரவா 52 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 48 ரன்கள் குவித்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 40.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்கள் மட்டுமே குவித்தது. அதற்குப் பின்னர் பேட்டிங் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி விரைவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம்
ஆனால் எதிர்பாராத விதமாக ஜிம்பாப்வே அணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். இதில் குறிப்பாக கேப்டன் ரிஸ்வான் 19 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக இது அமைய, 21 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் குவித்து இருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஸ்டார்க் கிட்ட நான் பேச காரணம் ஹர்ஷித் ராணா இல்ல.. களத்தில் இதுதான் நடந்தது – ஜெய்ஸ்வால் பேட்டி
தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் டக் வொர்த் லீவிஸ் விதிப்படி ஜிம்பாப்வே அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணித்தரப்பில் முஜர்பானி, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் கலக்கிய சிக்கந்தர் ராஸா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்த போட்டியில் வெற்றி பெற பாகிஸ்தான் அணி தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.






