நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியை வென்றது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது என ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா கூறியிருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 169 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியை 146 ரன்களில் ஆல் அவுட் செய்து 23 ரன்களில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணனாக மகிழ்ச்சி
இந்த வெற்றி குறித்து ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா பேசும்பொழுது “தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் காயம் தற்காலிகமானதுதான். நான் இரண்டு மூன்று நாட்களில் சரியாகி விடுவேன். ஆஸ்திரேலியா அணியை வென்றது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தம்பிகள் சேர்ந்து ஒரு பெரிய சாதனையை செய்வதை பார்த்து மகிழும் அண்ணனின் உணர்வில் இருக்கிறேன். நாங்கள் உருவாக்கியுள்ள கலாச்சாரம், சூழல் மற்றும் ஒற்றுமை அற்புதமானது. அதற்கு மேலாக நம்ப முடியாத இந்த வெற்றி பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது”
“நாங்கள் 10 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்திருந்த போது கூட நான் சந்தோஷமாகவே இருந்தேன். மேலும் 190 ரன்னை நோக்கி விளையாட வேண்டாம் என்று நாங்கள் பேசிக் கொண்டோம். ஏனென்றால் இலங்கையில் நீங்கள் பெரிய ரன்னுக்கு முயற்சி செய்தால் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தோல்வியடைவீர்கள். எனவே நாங்கள் 170 ரன் எடுத்தால் போதும் என்று முடிவு செய்து இருந்தோம்”
காயம் ஒரு பெரிய பிரச்சனை
“இன்று எங்களுடைய அணியில் பேட்டிங், பௌலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் வீரர்கள் மிகவும் அற்புதமாக செயல்பட்டார்கள். அவர்கள் எல்லைக்கோட்டில் பவுண்டரிகளை தடுத்ததை பார்க்கும் பொழுது அவர்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிந்தது”
இதையும் படிங்க : 169 ரன்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய ஜிம்பாப்வே.. சிறப்பு வரலாற்றை தக்க வைத்தது.. டி20 உலக கோப்பையில் திருப்பம்
“எங்கள் அணியில் சில வீரர்களுக்கு இப்போது காயம் இருக்கிறது. நானும் தற்பொழுது காயம் அடைந்திருக்கிறேன். இப்போதைக்கு 15 பேர் கொண்ட அணியில் 13 பேர் மட்டுமே உடல் தகுதியுடன் இருக்கிறோம். எனவே ஜிம்பாப்வே கிரிக்கெட் இதை பார்த்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். அவர்கள் மாற்று வீரர்கள் குறித்து சிந்திப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.






