இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச செய்ய முடிவு செய்தது. இந்த இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது போட்டிக்கு வந்திருந்தன.
ஜிம்பாப்வே அபாரம்
இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பென்னட் 56 பந்தில் 64 ரன்கள், மருமாணி 21 பந்தில் 35 ரன்கள் எடுத்து மிகச்சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் வந்த ரியான் பர்ல் 30 பந்தில் 35 ரன்கள் எடுத்து பொறுமையாக விளையாடினார்.
இந்த நிலையில் நான்காவது இடத்தில் வந்த கேப்டன் சிக்கந்தர் ராஸா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ரன்கள் எடுத்தது. கிரீன் மற்றும் ஸ்டோய்னிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
சுருண்ட ஆஸ்திரேலியா
இதைத்தொடர்ந்து 170 ரன் இலக்கை நோக்கி விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் டிராவீஸ் ஹெட் 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் இங்லீஷ் 4 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தது வெளியேறினார். அடுத்து வந்த கேமரூன் கிரீன் மற்றும் டிம் டேவிட் இருவரும் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்கள்.
இதையும் படிங்க : பேட்டிங் பௌலிங் இரண்டிலும் அசத்தல்.. கடுமையான ராணுவ பயிற்சி.. 1 நாளைக்கு 2 வேளை இத செய்வேன் – ஹர்திக் பாண்டியா பகிர்வு
இதற்கு அடுத்து தடுமாற்றத்தோடு விளையாடிய மேக்ஸ்வெல் 32 பந்தில் 31 ரன்கள், பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்த மேத்யூ ரென்சா 44 பந்தில் 65 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றை ஜிம்பாப்வே அணி தக்க வைத்திருக்கிறது.






