இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியை இப்போதைக்கு பிரயாஸ் ஐயர் எதிர்பார்க்கக் கூடாது என்றும், அதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு அவர் முக்கியத்துவம் தர வேண்டும் என ஜாகிர் கான் கூறியிருக்கிறார்.
கடந்த 3 வருடங்களாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதில் கேகேஆர் அணிக்கு கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையையும் வென்றிருக்கிறார். மேலும் கடந்த இரண்டு வருடமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
இந்திய டி20 கேப்டன்
தற்போது இந்திய டி20 அணிக்கு உலகக்கோப்பை வென்ற சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். ஆனால் அவர் நீண்ட காலமாக மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு தற்போது 35 வயதாகிறது. எனவே அவரை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஜாகிர் கான் பேசும்போது “முதலில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய டி20 அணியில் இடம் பிடிப்பதுதான் நோக்கமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்த நேரத்தில் அவர் கேப்டன் பதவியை யோசிக்கிறாரா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உரிய நேரத்தில் இந்த பதவிக்கு அவர் நல்ல போட்டியாளராக இருப்பார்”
இப்போது இதை செய்ய வேண்டும்
“அவர் சில காலமாக ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருந்து வருகிறார். மேலும் அந்த அணிகளை வழிநடத்திய விதத்தில் வெற்றிகரமாக இருந்திருக்கிறார். தெளிவாகவே ஒரு கேப்டனுக்கான தொலைநோக்கான பார்வை அவரிடம் இருக்கிறது”
இதையும் படிங்க : கனொலி பிரியன்ஸ் ஆர்யா யார் அதிக சிக்சர் அடிக்கிறதுனு போட்டி.. அதுக்கு நான் தரப்போற பரிசு இதுதான் – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
“தற்போது இந்திய டி20 அணியில் உள்ள வீரர்களை பார்க்கும்போது, ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களுடன் போட்டியிடுவதற்கு சிறப்பான முறையில் பேட்டிங்கில் செயல்பட வேண்டும். அதன் மூலம் முதலில் பேட்ஸ்மேனாக இந்திய டி20 அணியில் நுழைவதற்கு பார்க்க வேண்டும். அதுவே சரியானதாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






