ஐபிஎல் 2027 தொடருக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஹெட் கோச்சாக பொறுப்பேற்றது குறித்த உரையாடல் மிகவும் எளிமையாக இருந்தது என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக சிஎஸ்கே அணியின் ஹெட் கோச்சாக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பிற்கு ஜாகீர் கான் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் தடுமாறி வரும் சிஎஸ்கே அணியை மீண்டும் வெற்றிகரமான பாதையில் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு தற்போது ஜாகீர் கானிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜாகீர் கான் பேசும்போது “இதற்கான நடைமுறைகள் மிகவும் எளிமையாகவும் நேரடியாகவும் இருந்தன. தோனி எப்போதும் சிஎஸ்கே அணியின் முக்கிய சக்தியாக இருந்து வருகிறார். உரிமையாளர்கள் ரூபா மற்றும் சிஇஓ காசி விஸ்வநாதன் என்னிடம் பேசி நீங்கள் ஃப்ரீயாக இருக்கிறீர்களா என்று கேட்டார்கள், அதற்கு நான் இதில் இணைந்து செயல்படுவது தனக்கு பெரும் கௌரவம் என்று கூறினேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “கிரிட்டிசிசம் மற்றும் பிரஷர் இருக்கும் அதே வேளையில் இது ஒரு சவாலான பொறுப்பாகும். அனைவரும் எதிர்பார்க்கும் லெவலுக்கு அணியை உயர்த்த வேண்டும், இந்த புதிய பொறுப்பை நான் மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறேன்” என்று கூறி இருக்கிறார்.