இந்திய தொடக்க பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே நடந்த மைதான மோதல் குறித்த தகவலை இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரல் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கொழும்பில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை இழந்த பிறகு அமைதியாக ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஆனால் அசிதா பெர்னாண்டோ அவரைத் தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டத் தொடங்கியதால் தான் ஜெய்ஸ்வால் கோபமடைந்து பதில் அளிக்கத் தொடங்கினார்.
இந்த சம்பவத்திற்காக ஐசிசி இரு வீரர்களுக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதித்ததுடன் ஒரு டிமெரிட் புள்ளியையும் வழங்கி நடவடிக்கை எடுத்தது.
ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் நிகழ்ச்சியில் இது குறித்து துருவ் ஜூரல் பேசும்போது “யஷஸ்வி அவுட் ஆன பிறகு மிகவும் அமைதியாக ட்ரெஸ்ஸிங் ரூம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் எதுவுமே பேசவில்லை. ஆனால் பெர்னாண்டோ அவரைத் தேவையில்லாமல் திட்டிக் கொண்டே இருந்தார். அது பற்றி யஷஸ்வி என்னிடம் கூறும்போது ‘அவர் நார்மல் அக்ரஷன் காட்டினால் பரவாயில்லை, அவர் என்னுடைய விக்கெட்டை எடுத்து விட்டார் என்பதால் அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அவர் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டக் கூடாது’ என்று கூறினார்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய ஜூரல் “அவர் யாரிடமும் தேவையில்லாமல் வம்புக்குச் செல்ல மாட்டார். அவர் பாட்டிற்கு தனது பேட்டிங் மண்டலத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார். ஆனால் யாராவது எல்லை மீறினால் அவர் நிச்சயம் அமைதியாக இருக்க மாட்டார். நீங்கள் அவருக்கு ஒன்றைக் கொடுத்தால் அவர் கண்டிப்பாக அதைத் திரும்பக் கொடுப்பார்” என்று கூறி முடித்தார்.