ரோஹித் ஷர்மாவுக்குப் பின் இந்திய டெஸ்ட் கேப்டன் பொறுப்பை இவரிடம் வழங்க வேண்டும் – யுவராஜ் சிங் அறிவுரை

0
104
Rohit Sharma and Yuvraj Singh

இந்திய அணியை தற்பொழுது அனைத்துவித பார்மெட்டிலும் ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 1-2 என்கிற கணக்கில் தோல்வியடைந்தது.

முன்னரே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் புதிய கேப்டனாக தலைமையேற்ற ரோஹித், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் புதிய டெஸ்ட் கேப்டனாகவும் தலைமையேற்றார்.

தற்பொழுது ரோஹித் ஷர்மாவிற்கு வயது 34 ஆகிறது. இங்கிருந்து நீண்ட காலம் அவரால் இந்திய அணியை தலைமை தாங்க முடியாது. இன்னும் ஒரு சில ஆண்டுகளில் வேறு ஒரு கேப்டனாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கும். அந்த இடத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார் என்று யுவராஜ் சிங் தற்போது கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து பெருமையாக பேசி உள்ள யுவராஜ் சிங்

ரிஷப் பண்ட் நாளுக்கு நாள் தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றி கொண்டு வருகிறார். அவரிடம் விளையாட்டு திறமையைத் தாண்டி ஒரு கேப்டனிடம் இருக்க வேண்டிய குணாதிசயங்கள் நிறைய இருக்கின்றது. நிச்சயமாக இந்திய அணியை குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்திய அணியை மிக சிறப்பாக தலைமை தாங்குவார்.

டெஸ்ட் அணியில் தற்போது தனக்கென்று நிறைந்த இடத்தை அவர் பிடித்துவிட்டார். எனவே அவரிடம் டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை வருங்காலத்தில் கொடுப்பது சரியான முடிவாக இருக்கும் என்று யுவராஜ் சிங் தற்பொழுது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உடனடியாக மாயாஜாலங்கள் நிகழ்ந்து விடாது

ரிஷப் பண்ட் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி விடுவாரா என்று கேட்பவர்களுக்கு ஒரே ஒரு விளக்கத்தை நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

2007 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததும் டிராவிட் தலைமை பொறுப்பில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் இந்திய அணியை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கினார். ஒரு சில ஆண்டுகள் கழித்து அனில் கும்ப்ளே டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கீழே இறங்க, டெஸ்ட் அணிக்கும் மகேந்திரசிங் தோனி தலைமை ஏற்றார்.
பின்னர் அங்கிருந்து மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடியது நம் அனைவருக்கும் தெரிந்த கதை.

ரிஷப் பண்டிற்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து உடனடியாக நாம் அற்புதமான வெற்றிகளையும் மாயா ஜாலங்களையும் எதிர்பார்க்க கூடாது. அவருக்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும். ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ அவரது தலைமைப் பொறுப்பு எப்படி இருக்கின்றது என நாம் பொறுமையாக பார்க்க வேண்டும்.

ஏழாவது இடத்தில் களம் இறங்கி ஆஸ்திரேலிய அணியில் ஆடம் கில்கிறிஸ்ட் 17 சதங்கள் குவித்திருக்கிறார் (17 போட்டிகளில்). ரிஷப் பண்ட் தற்பொழுதே 4 சதங்கள் குவித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரையில் அனைத்து ரீதியிலும் திறமை வாய்ந்த ஒரு வீரராக ரிஷப் பண்ட் என் பார்வையில் தெரிகிறார். அவரை நம்பி கூடியவிரைவில் டெஸ்ட் அணியின் தலைமைப் பொறுப்பை கொடுப்பது நிச்சயம் சரியான முடிவாக இருக்கும். அவரது தலைமையில் இந்திய அணி நிச்சயமாக சிறப்பாக செயல்படும் என்று யுவராஜ் சிங் மீண்டும் ஒருமுறை நம்பிக்கையாக கூறியுள்ளார்.