இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்ற கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் செய்த ஒரு விஷயத்திற்கு அவர் விளையாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அதிரடியாக கூறியிருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் சுமாரான செயல்பாட்டை கொண்ட அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இருந்து வருகிறது. இந்த முறை இறுதிப் போட்டிக்கு சென்றதோடு சேர்த்து மொத்தம் மூன்று முறைதான் ப்ளே ஆப் சுற்றுக்குள் கால் வைத்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த அணியின் செயல்பாடு மோசமாக அமைந்திருக்கிறது.
களத்திற்கு உள்ளே வீரர்களை மிகச் சிறந்த முறையில் ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்தி கூட்டிச் சென்றார் என்றாலும் கூட, இந்த அணியை உருவாக்கி ஸ்ரேயாஸ் ஐயர் கையில் கொடுத்தது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவனில் ஆறு அன் கேப்டு இந்திய வீரர்கள் இடம்பெற்று இருந்தார்கள். அந்த அளவுக்கு தைரியமாக ரிக்கி பாண்டிங் இளம் வீரர்களை நம்பி வாய்ப்புகளை கொடுத்தார்.
இந்த ஜோடி மிகச் சிறந்த முறையில் வியூகங்களை அமைத்து தைரியமாக விளையாட்டை அணுகி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. தொடர்ந்து இரண்டாவது தகுதி சுற்றில் வென்று இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் எதிர்பாராத விதமாக சாதாரண பந்துக்கு ஆட்டம் இழக்க அந்த அணி சரிவை சந்தித்து தோல்வி அடைந்தது.
இதுகுறித்து பேசி இருக்கும் யோக்ராஜ் சிங் கூறும் பொழுது “இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த ஷாட் என்னை பொறுத்தவரையில் ஒரு கிரிமினல் குற்றம். இந்த வகையான குற்றம் பிரிவு 302 இன் கீழ் வருவதாக அசோக் மன்கட் என்னிடம் கூறினார். இதற்கு தண்டனை என்ன கொடுக்கலாம் என்றால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கலாம் என்று மேலும் அவர் என்னிடம் சொன்னார்”
இதையும் படிங்க: ஐபிஎல் வெற்றி கொண்டாட்டம் தேவையில்லாதது.. ஆர்சிபி அணி நிர்வாகத்துக்கு அவசரம் ஏன்? – மதன்லால் விமர்சனம்
“மிக முக்கியமான இறுதிப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய அந்த ஷாட் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதற்காக மன்னிப்பு கூட கேட்க முடியாது. ஏனென்றால் அவர் விளையாடிய விதத்தை மன்னிக்கவே முடியாது” என்று அவர் மிகவும் கோபமாக தெரிவித்து இருக்கிறார்.