தற்போது மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வரும் ரிஷப் பண்டின் பிரச்சனைகளை தன்னால் ஐந்தே நிமிடத்தில் சரி செய்து விட முடியும் என யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் கூறி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி அணியுடன் கடைசி வரை போட்டியிட்டு 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ரிஷப் பண்ட்டை வாங்கியது. இப்போதைக்கு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் இருந்து வருகிறார்.
இதுவரை இல்லாத சோகம்
இந்த நிலையில் இந்த ஆண்டு ரிஷப் பண்ட் மொத்தம் 12 போட்டிகளில் விளையாடி வெறும் 135 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இவருடைய பேட்டிங் ரன் சராசரி 12. 27 என்றும், பேட்டிங் ஸ்டிரைக் ரேட் சரியாக 100 என்றும் மிக மோசமாக இருக்கிறது. அவருடைய ஐபிஎல் வரலாற்றில் எந்த அளவிற்கு பேட்டிங் மோசமாக சரிந்தது கிடையாது.
இவருடைய தனிப்பட்ட பேட்டிங் மோசமாக இருக்கின்ற காரணத்தினால் ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக ஆரம்பித்த லக்னோ அணி தற்போது பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறி இருக்கிறது. 12 போட்டிகளில் அந்த அணி 5 போட்டிகளை வென்று இருக்கிறது. அதே சமயத்தில் ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன் ஆக கேப்டனாக செய்த சில தவறுகளால் நிறைய போட்டிகளை தோற்றுவிட்டது. இதனால் இந்த முறை லக்னோ வெளியேறியதற்கு முழு பொறுப்பும் அவரையே சேர்கிறது.
ஐந்து நிமிடத்தில் சரி செய்து விடுவேன்
இந்த நிலையில் இந்திய முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் ரிஷப் பண்ட்டுக்கு பேட்டிங்கில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்றும், அந்த பிரச்சினைகளை தன்னால் வெறும் ஐந்து நிமிடத்திலேயே சரி செய்து விட முடியும் என்று வழக்கம்போல் பரபரப்பான முறையில் பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க : சிஎஸ்கேவில் ருதுராஜ் காயம் மர்மமா இருக்கு.. இந்திய ஏ டீம் செலக்சன் எப்படி நடந்தது? – ஆகாஷ் சோப்ரா பேச்சு
இதுகுறித்து யோக்ராஜ் சிங் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் பிரச்சனையை வெறும் ஐந்து நிமிடத்தில் சரி செய்து விடலாம். அவர் பேட்டிங் செய்யும்பொழுது அவருடைய தலை நிலையாக இல்லை. மேலும் அவருடைய இடது தோள்பட்டை விரிந்து வெளியே திரும்பி இருக்கிறது. இந்த இரண்டு சாதாரண விஷயங்களையும் கவனம் செலுத்தி சரி செய்தால் அவர் உடனே சிறந்த பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி வந்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்.