முதல் நாள் ஆட்டம், இந்தியாவுக்கு சோகம்… டிராவிஸ் ஹெட், ஸ்மித் அபாரம்; 250 ரன்கள் பார்ட்னர்ஷிப்…! – வலுவான நிலையில் ஆஸி.,

0
248

முதல் நாள் ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் சதம், ஸ்மித் அரைசதம் அடித்து 250 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, 327/3 என வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணைகள் மோதும் இப்போோட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் மற்றும் கவாஜா இருவரும் ஓபனிங் இறங்கினர். இதில் கவாஜா துவக்கம் முதலே திணறி வந்தார். ரன் ஏதும் எடுக்காமல் இருந்த இவரை நேர்த்தியாக விக்கெட் எடுத்தார் முஹம்மது சிராஜ். பின்னர் லபுஜானே உள்ளே வந்தார்.

2ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் லபுஜானே இருவரும் 69 ரன்கள் சேர்த்தனர். உணவு இடைவேளைக்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தபோது, வார்னர் துரதிஷ்டவசமாக 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார் இவரது விக்கெட்டை தூக்கினார் சர்துல் தாக்கூர்.

ஸ்மித் மற்றும் லபுஜானே இருவரும் உணவு இடைவேளை முடிந்து களமிறங்கினர். வந்த முதல் ஓவரை முகமது ஷமி வீச, முதல் பந்திலேயே லபுஜானே வெளியேறினார். இவர் 26 ரன்கள் அடித்திருந்தார். 76 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸி., அணி.

- Advertisement -

இந்திய அணி ஆதிக்கம் செலுத்த துவங்கிய நேரத்தில் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இந்திய பவுலர்களுக்கு அச்சுறுத்தலை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா பவுலர்களை மாற்றி பார்ததும் அசராமல் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது இந்த ஜோடி.

டிராவிஸ் ஹெட் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது போல பந்துக்குப் பந்து ரன்களை அடித்து வந்தார். சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசி பௌலர்களுக்கு திணறலை கொடுத்தார். மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரம் போல நின்று கொண்டு ரன்கள் அடிக்காமல் எரிச்சலூட்டினார்.

- Advertisement -

இரண்டாவது செஷன், மூன்றாவது செஷன் என எதிலும் விக்கெட் இழக்காமல் இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக அரைசதம் அடித்து, அதன் பிறகு இன்னும் விரைவாக சதத்தை நெருங்கினார். ஆஸ்திரேலியா அணிக்கு ரன்குவிக்கும் வேகத்தை இன்னும் துரிதப்படுத்தினார். மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித் ஆமை வேகத்தில் அரைசதம் கடந்து தனது நிதானமான ஆட்டத்தை தொடர்ந்துவர இந்திய அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது.

இந்த ஜோடியின் பார்ட்னர்ஷிப் இருநூறு ரன்களை கடந்தது. அதன் பிறகு மீண்டும் பவுலர்களை மாற்றிப் பார்த்தார் கேப்டன் ரோகித் சர்மா. முதல் நாள் முடியும் வரை இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85 ஓவர்கள் வீசப்பட்டிருந்தது. அதில் மூன்று விக்கட்டுகளை மட்டுமே இழந்த ஆஸ்திரேலியா அணி 327 ரன்கள் குவித்தது.

நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்திருந்த ஹெட் மற்றும் ஸ்மித் இருவரும் சேர்ந்து 251 ரன்கள் சேர்த்திருந்தனர். ஹெட் 156 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 22 பவுண்டரிகள் உட்பட 146 ரன்கள் அடித்திருந்தார். ஸ்மித் 14 பவுண்டரிகள் உட்பட 96 ரன்கள் அடித்திருந்தார்.