ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரை பிசிசிஐ நிர்வாகம் நடத்தி வருகிறது. டபிள்யூபிஎல் தொடரின் முதல் சீசனின் மும்பை அணியும், 2வது சீசனை ஆர்சிபி அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன. கடந்த ஆண்டு ஆர்சிபி அணி கோப்பையை வென்ற போது, பெங்களூர் நகரின் தெருக்களில் ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
அதேபோல் ஆர்சிபி அணி வீரர்கள் தரப்பில் மகளிர் வீராங்கனைகளுக்கு கார்டு ஆஃப் ஹானர் மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு வீராங்கனைகள் டபிள்யூபிஎல் தொடரில் பங்கேற்க ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
தொடங்கும் டபிள்யூபிஎல் 2025
இந்த சீசன் வரும் பிப்.14ம் தேதி தொடங்கவுள்ளது. வழக்கமாக மகளிர் பிரீமியர் லீக் தொடர் ஒன்று அல்லது இரு நகரங்களில் மட்டும் நடத்தப்படும். முதல் சீசன் பெங்களூர் நகரிலும், 2வது சீசன் மும்பை மற்றும் டெல்லி நகரங்களின் மைதானங்களிலும் நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.
நட்சத்திர வீராங்கனைகளின் ஆட்டத்தை பார்க்க பல்வேறு மாநிலத்தின் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு இம்முறை நான்கு நகரங்களில் நடத்தப்படவுள்ளது. பிப்.14 முதல் பிப்.19 வரையிலான போட்டிகள் குஜராத் மாநிலத்தின் வடோதரா மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பிப்.21 முதல் மார்ச் 1 வரையிலான போட்டிகள் பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கவுள்ளது. பிறகு, மார்ச் 3 முதல் மார்ச் 8 வரையிலான போட்டிகள் லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடக்கவுள்ளது. பின்னர், மார்ச் 10 முதல் மார்ச் 15 வரையிலான லீக் மற்றும் நாக் அவுட் போட்டிகள் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நேரடி ஒளிபரப்பு விவரங்கள்
30 நாட்கள் நடக்கவுள்ள இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மொத்தமாக 20 குரூப் போட்டிகள், 2 நாக் அவுட் மற்றும் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. வழக்கம் போல் மாலை 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டபிள்யூபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக நேரலையில் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: விராட் இல்ல.. இந்திய அணியின் ரொனால்டோ இவர்தான்.. இவருக்காக பிசிசிஐ இதை செய்யுங்க – ஹார்மிஸன் கருத்து
தொலைக்காட்சியை பொறுத்தவரை ஸ்போர்ட்ஸ் 18ல் நேரலையில் பார்க்க முடியும். கடந்த 2 சீசன்களாக டெல்லி அணி இறுதிப்போட்டியில் விளையாடிய போதும், அவர்களால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. அதேபோல் முதல்முறையாக குஜராத், லக்னோ மைதானங்களில் போட்டிகள் நடப்பதால், இம்முறை மகளிர் பிரீமியர் லீக் தொடர் கூடுதல் பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம்.






