மகளிர் பிரீமியர் லீக் தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய அர்சிபி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் ஆர்சிபி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றதன் மூலமாக புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் நிறைவு செய்தது. இந்த தோல்வியின் காரணமாக மும்பை அணி 10 புள்ளிகளுடன் நிறைவு செய்து, நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இறுதியாக டெல்லி கேபிடல்ஸ், மும்பை மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
பிளே ஆஃப் சுற்று
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஆஃப் சுற்றை பொறுத்தவரை புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெறும். அதன்படி டெல்லி கேபிடல்ஸ் அணி ரன் ரேட் அடிப்படையில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதனால் நாளை நடக்கவுள்ள எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை – குஜராத் அணிகள் மோதவுள்ளன.
இதில் கடந்த 2 சீசன்களிலும் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. குஜராத் அணி முதல்முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி வந்துள்ளது. இதனால் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியை குஜராத் அணி வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நாளை தொடங்கவுள்ளன.
நேரலை ஒளிபரப்பு
மும்பை – குஜராத் அணிகளுக்கு இடையிலான எலிமினேட்டர் ஆட்டம் நாளை மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, மார்ச் 15ல் நடக்கும் இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடும் என்று தெரிகிறது. அந்த ஆட்டமும் மும்பை பிரபோர்ன் மைதானத்திலேயே நடக்கும்.
இந்த போட்டிகளின் நேரலை 6 மணிக்கு தொடங்கப்பட்டாலும், இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும். இதனை ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையிலும், ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலி மூலமாக ஓடிடியிலும் நேரலையில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






