இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் அதற்கு அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி சேர்க்கப்பட்டது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்னமாச்சாரி ஸ்ரீகாந்த் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்த பிறகு இந்திய அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதற்கு அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட போகும் இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். பல புதிய வீரர்கள் இந்திய அணியில் இணைந்திருக்கும் நிலையில் குறிப்பிடத்தக்க விஷயமாக 15 வயது இளம் வீரர் வைபவ் சூரியவன்சி இந்திய அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்.
அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினால் மிகக் குறைந்த வயதில் இந்திய அணியில் விளையாடிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடிப்பார். சச்சின் தனது 16 வது வயதில் இந்திய அணிக்கு அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவரை அவசரப்பட்டு பிளேயிங் லெவன் அணிக்குள் விளையாட வைக்க வேண்டாம் என அதற்கான சில காரணங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “அவர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனக்கான ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ளார். இந்த விஷயத்தில் வயது அவருக்கு ஒரு காரணியாக இருக்கப்போவதில்லை. அவர் சிறப்பாக விளையாடியதே இதற்கு காரணம். இந்திய அணியில் அவர் சிறப்பாக விளையாடினாலும் சரி, அல்லது விளையாடாவிட்டாலும் சரி அடுத்த மூன்று வருடத்திற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியில் அவருக்கான இடத்தை இந்திய நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அடுத்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அவரை கட்டாயப்படுத்தி விளையாட வைக்க கூடாது. ஏனென்றால் பலமான அணியோ அல்லது பலம் இல்லாத அணியோ என எதுவாக இருந்தாலும் அவர் தனது சிறந்த ஆட்டத்தை விளையாடுவார். அவரை சற்று காத்திருக்க விடுங்கள் சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரர்களாக இறங்கட்டும். மாற்றுவீராக இருக்கும்போது அவர் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார். முதிர்ச்சியான சிந்தனை கொண்ட வீரர் அவர். சச்சின் கிரிக்கெட்டின் கடவுள் என்றால் அவரது மகனாக வைபவ் இருக்கக்கூடும்” என்று பேசி இருக்கிறார்.






