பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேக பந்துவீச்சு உலகச் சாதனை; டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!

0
3105
WT20WC

மகளிர் டி20 உலகக்கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்பொழுது இந்தத் தொடர் அரையிறுதி போட்டிகளை முடித்துக் கொண்டு, இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது!

இந்தத் தொடரில் குழு ஏ பிரிவில் இடம் பெற்ற ஆஸ்திரேலியா குழுவில் முதலிடம் பிடித்தும், தென் ஆப்பிரிக்கா இரண்டாம் இடம் பிடித்தும் அரை இறுதிக்கு முன்னேறின. பி பிரிவில் இங்கிலாந்து முதலிடத்தையும் இந்தியா இரண்டாம் இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின!

- Advertisement -

முதல் அரை இறுதியில் ஏ பிரிவில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலியா பி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிகள் நேற்று மோதின. பரபரப்பாக நடந்த அந்த ஆட்டத்தில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்று ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று பி பிரிவில் முதலிடம் பெற்ற இங்கிலாந்து அணிக்கும் ஏ பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணிக்கு அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் இருவரும் அரை சதம் அடித்து அபார துவக்கம் தந்தார்கள். லாரா வோல்வாட் 53 ரன்கள், பிரீட்ஸ் 68 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்க அணி பலமான ஆரம்பத்தை பெற்றது. அடுத்து வந்த காப் 27 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென்னாபிரிக்க அணி 164 ரன்களை நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு டேனி வாட் 34, சோபியா 28, நாட் சிவியர் 40, ஹீதர் நைட் 31 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணியால் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுடன் மோத இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றது!

இந்த போட்டியின் கடைசி ஓவரில் 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட அந்த ஓவரை வீசிய 34 வயதான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீராங்கனை சப்னம் இஸ்மாயில் ஒரு விக்கட்டை வீழ்த்தி ஏழு ரன்கள் மட்டுமே விட்டு தந்தார். மேலும் இந்த ஆட்டத்தில் இவர் 4 ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். இது மட்டும் அல்லாமல் மணிக்கு 80 மைல் வேகத்தில் வீசி, மகளிர் கிரிக்கெட்டில் முதன் முதலில் இந்த வேகத்தை எட்டிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இது மணிக்கு 128 கிலோமீட்டர் வேகம் ஆகும். தற்போது மகளிர் கிரிக்கெட்டில் அதிகபட்ச வேகத்தில் வீசப்பட்ட பந்து இதுதான்!