நாளை இந்திய அணி 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது!
இதேபோல் 36 வருடங்களுக்கு முன்பாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 1987 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடியது.
அந்த போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீசுவதென முடிவு செய்தது. ஆலன்பார்டர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி களம் இறங்க, இந்திய அணி கபில்தேவ் தலைமையில் எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஜெப் மார்ஸ் சிறப்பாக விளையாடி 141 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 110 ரன்கள் எடுத்தார். இவர் தற்போது ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்து இருக்கும் மிட்சல் மார்ஸ் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்தது.
இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் 32 ரன்களில் 37 ரன்கள் எடுத்தார். மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 83 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். மூன்றாவதாக வந்த நவ்ஜோத் சிங் சித்து 79 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். நான்காவதாக வந்த வெங்சர்கார் 45 பந்தில் 29 ரன்கள் எடுத்தார்.
நவ்ஜோத் சிங் சித்து மூன்றாவது விக்கெட்டாக ஆட்டம் இழக்கும் பொழுது இந்திய அணியின் ஸ்கோர் 207. இதற்குப் பிறகு இந்திய அணியின் விக்கட்டுகள் மளமளவென்று சரிந்து, ஒரு பந்து மீதம் இருக்கையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 269 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த போட்டியில் முகமது அசாருதீன் 10, கபில் தேவ் 6, ரவி சாஸ்திரி 6, ரோஜர் பின்னி 0, மனோஜ் பிரபாகர் 5, மனிந்தர் சிங் 4 என அடுத்தடுத்து வரிசையாக ஆட்டம் இழந்து, இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு தோல்வியைக் கொடுத்தார்கள்.
83ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வந்த கவில்தேவ் தலைமையிலான இந்திய அணி, 87ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை சென்னை சேப்பாக்கத்தில் சந்தித்து தோற்று, அங்கிருந்து அந்தத் தொடர் முழுவதும் தோல்விகளாகச் சந்தித்து வெளியேறியது.
36 ஆண்டுகளாக இந்திய அணிக்கு இது ஆறாத ஒரு வடுவாக இன்று வரையில் இருக்கிறது. இதற்கான மருந்தாக நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், நடப்பு உலகக்கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா? என்பது வரலாறு தெரிந்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!






