ஆண் ஆர்சிபி அணியை மிஞ்சிய பெண் ஆர்சிபி அணி; ஐந்துக்கு ஐந்தும் போச்சு!

0
286
WPL

நடைபெற்று வரும் முதல் பெண்கள் ஐபிஎல் தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி டெல்லி அணியை சந்தித்தது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்த போட்டியில் தோற்றால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆப் வாய்ப்பிலிருந்து வெளியேற வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருந்தது. விளையாடிய முதல் நான்கு ஆட்டங்களையும் தோற்று இருந்ததால் இந்த சூழ்நிலை உருவாகி இருந்தது!

- Advertisement -

இதன்படி பெங்களூர் அணிக்கு துவக்க வீராங்கனைகளாக வந்த கேப்டன் ஸ்மிருதி மந்தனா 9 ரன்கள், சோபி டிவைன் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்து களம் கண்ட ஆஸ்திரேலியாவின் அலைஸ் பெரி அணிக்குத் தேவையான நேரத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளை சந்தித்த அவர் 4 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்றார்.

இன்னொரு முனையில் ஹீதர் நைட் 11 ரன்களில் வெளியேற, இந்திய விக்கெட் கீப்பிங் வீராங்கனை ரிச்சா கோஸ் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரது அதிரடி ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் அணி 150 ரன்கள் எட்ட உதவியது.

இதற்கு அடுத்து களம் கண்ட டெல்லி அணிக்கு இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் மெக் லானிங் 15 ரன்கள் எடுத்து வெளியேறியதோடு, அதிரடி வீராங்கனை சபாலி வர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து வந்த நான்கு டெல்லி வீராங்கனைகளும் மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். அலைஸ் கேப்சி 24 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 38 ரன்கள், ஜெமிமா ரோட்டரிக்யூஸ் 28 பந்தில் மூன்று பவுன்டரிகள் உடன் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த மரிசானா காப் 32 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 33 ரன்களுடனும், ஜோனசன் 15 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 29 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் நின்று, இரண்டு பந்துகள் மீதம் இருக்கையில் டெல்லி அணிக்கு ஐந்தாவது போட்டியில் நான்காவது வெற்றியை பெற்று தந்தார்கள்.

நான்கு போட்டிகளில் நான்கையும் வென்ற மும்பை அணி முதல் இடத்திலும், ஐந்து ஆட்டத்தில் 4 போட்டிகளை வென்ற டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஐந்தில் ஐந்து போட்டியையும் தோற்ற பெங்களூர் அணி ஏறக்குறைய பிள்ளையார் வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது என்று கூறலாம்.