இந்திய டி20ஐ அணியின் சமீபத்திய தோல்விகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் காட்டமாக பேசியுள்ளார்.
உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு நடைபெற்ற சில போட்டிகளில் இந்திய அணி பின்னடைவைச் சந்தித்ததால் விமர்சகர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அவர், தொடர்ந்து வெற்றி நடை போடும் ஒரு அணியில் சில போட்டிகளில் ஏற்படும் தோல்விகள் அந்த அணியின் திறமையை குறைத்துவிடாது என்று கூறியுள்ளார்.
அணியின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் மீதான நம்பிக்கையை தக்கவைப்பது மிகவும் முக்கியம் என்பதால், குறுகிய காலத்தில் முடிவுகளை மாற்றுவது தவறான அணுகுமுறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து இந்திய அணியின் ஹெட் கோச் கௌதம் கம்பீர் பேசும்போது, “கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் உலகக் கோப்பையை வென்றுள்ளோம் என்பதை யோசித்து பாருங்கள். விளையாட்டு வரலாற்றில் எந்த ஒரு அணி ஒரு உலகக் கோப்பையில் இருந்து அடுத்த உலகக் கோப்பை வரை தோல்வியே அடையாமல் தொடர்ந்து விளையாடி மீண்டும் கோப்பையை வென்றிருக்கிறது?” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது, “இரண்டாவது உலகக் கோப்பையை வெல்ல இந்த வீரர்களுக்கு 17 ஆண்டுகள் ஆகவில்லை, மூன்றாவது உலகக் கோப்பையை வெல்ல வெறும் 17 மாதங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். திடீரென ஒரு மோசமான தொடரோ அல்லது மூன்று மேட்ச்களில் சுமாரான செயல்பாடோ அவர்களை மோசமான பிளேயர் என்றோ, நம்மை மோசமான டீம் என்றோ மாற்றிவிடாது. அதனால் தான் இந்தத் தொடர்ச்சித் தன்மையைக் காப்பாற்றுவது எங்களுக்கு மிகவும் முக்கியமாக இருந்தது.” என்று கூறி இருக்கிறார்.






