உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? – அஸ்வின் பதில்!

0
1378

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமான இன்று முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில் அந்தப் போட்டி டிராவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது . இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது இந்தத் தொடரை இந்திய அணி 3-1 இன்று வெற்றி பெறும் பட்சத்தில் வேறு எந்த அணிகளின் வெற்றி தோல்விகளையும் எதிர்பார்க்காமல் அவர்களால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற முடியும் .

ஆஸ்திரேலியா அணியானது கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்து 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது . அதன் பிறகு இரண்டு முறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது . இந்திய அணியின் பெஸ்ட் ஆல் ரவுண்டரும் முன்னணி சிலர் பந்துவீச்சாருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியானது உறுதியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்று தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தகுதி பெறுவதற்கான வாய்ப்பு நம் கைகளில் தான் இருக்கிறது அதற்கு தகுதியான அணியும் இந்தியாவிடம் உள்ளது . இதனால் ஆஸ்திரேலியா அணியை வென்று நிச்சயமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அஸ்வின்” இந்திய அணிக்கான ஜெர்சியை பெருமையுடன் அணிந்த நாளிலிருந்து என் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன . அதனை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு முறையும் என்னுடைய சிறந்த பங்களிப்பை அணிக்காக வழங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தனி ஒரு வீரராக எல்லா பொறுப்புகளையும் எடுத்து செய்வதென்பது கடினமான காரியம் அதனால் நம்முடைய பணிச்சுமையை சகவீரர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நமது அழுத்தம் கொஞ்சம் குறையும் . இதனை அறியாமல் ஆரம்ப கால கட்டங்களில் கொஞ்சம் சிரமத்தை ஏற்படுத்தியதாக” கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய அஸ்வின் போட்டியின் முக்கியமான தருணங்களையும் மிக முக்கியமான போட்டிகளையும் எப்போதுமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பேன் அந்த தருணங்களில் ஒரு விளையாட்டு வீரராக மிகவும் ரசித்து என்னுடைய திறமைகளை வெளிக்காட்டுவது எனக்கு விருப்பமான ஒன்று என்று கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கான டெஸ்ட் தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டு தனது பேட்டிங் திறமையினால் வெற்றிப் பாதைக்கு அஸ்வின் அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது ஓய்வில் இருக்கும் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறார்