விதியை மீறி 1 வருடம் கிரிக்கெட் ஆட தடை.. 9 வருட போராட்டம்.. யார் இந்த வாண்டர்சே?

0
57
Vandersay

நேற்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கொத்தாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி, இலங்கை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக சுழல் பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டர்சே இருந்தார். 2015ல் சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அறிமுகமான இவரது கிரிக்கெட் வாழ்க்கை போராட்டமான ஒன்றாக அமைந்திருக்கிறது.

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி இலங்கை அணியின் தோல்வியை வெகு வேகமாக உருவாக்கிக் கொண்டிருந்தார். இப்படியான நிலையில் வாண்டர்சே முதல் விக்கெட்டாக ரோகித் சர்மா விக்கெட்டை கைப்பற்றினார்.

- Advertisement -

இங்கிருந்து ஆரம்பித்த வாண்டர்சே சுப்மன் கில், சிவம் துபே, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல் என இந்திய அணியின் முதல் ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தமாக இந்திய பேட்டிங் யூனிட்டை சிதைத்து விட்டார். மேலும் இலங்கை அணையின் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக வெளியேறிய காரணத்தினால் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஜெஃப்ரி வான்டர்சே முதன்முதலாக 2015ஆம் ஆண்டு ஜூன் 30 கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு அறிமுகமானார். இலங்கை அணிக்காக 14 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி ஏழு விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். கடைசியாக இந்தியாவுக்கு எதிராக தரம்சாலா மைதானத்தில் 2022 ஆம் ஆண்டு டி20 போட்டியில் விளையாடினார்.

- Advertisement -

மேலும் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் இலங்கை அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை 22 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதில் கடைசியாக இந்திய அணிக்கு எதிராக கைப்பற்றிய ஆறு விக்கெட்டுகளும் அடக்கம். மேலும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் விளையாடி இருக்கிறார்.

மிக முக்கியமாக இவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய பின்னடைவாக 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் செயின்ட் லூசியாவில் ஹோட்டலை விட்டு வெளியே சென்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் மீண்டும் திரும்பி வந்து அணி உடன் இணையாத காரணத்தினால், ஒரு வருடம் இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. மேலும் அப்பொழுதே இலங்கைக்கும் திருப்பி அனுப்பப்பட்டார். மேலும் அவருடைய ஆண்டு சம்பளத்தில் 20% அபராதமும் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க : இலங்கை அணிக்கு எதிராக 18 வருட சாதனை முடிந்தது.. 27 வருட பெருமையையாவது காப்பாற்றுவார்களா?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

2015 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி கடந்த 9 வருடங்களில் மொத்தமாக அவர் 37 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். சராசரியாக ஒரு வருடத்திற்கு அவருக்கு நான்கு போட்டிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. 34 வயதாகி இருக்கும் இந்த நிலையில் ஹசரங்கா காயத்தால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒன்பது வருட கிரிக்கெட் போராட்டத்தில் தன்னுடைய பெயரை இலங்கை ரசிகர்கள் மறக்காத அளவுக்கு செய்திருக்கிறார். தற்பொழுது இவரை இலங்கை முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -