தற்போது உலகின் நம்பர்-1 பேட்ஸ்மேன் யார்? மஹேல ஜெயவர்தனா பதில்!

0
3990
Mahela Jayawardene

தான் விளையாடும் காலத்தில் மிகப்பெரிய பேட்ஸ்மேனாக, அழகிய பேட்டிங் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இலங்கையின் மகேல ஜெயவர்த்தனா. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் மிகவும் வெளிச்சத்தில் இருக்கும் ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவர். கிரிக்கெட் உடனான இவரது தொடர்பு மென்மேலும் இறுகிக் கொண்டே இருக்கிறது!

உலகின் நம்பர் 1 டி20 தொடரான ஐபிஎல் தொடரில் நம்பர்-1 அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். மேலும் இங்கிலாந்து நடத்தும் 100 பந்து தொடரில் கடந்த முறை சாம்பியனான சவுத்தர்ன் பிரேவ் அணிக்கும் இவர்தான் தலைமை பயிற்சியாளர்.

- Advertisement -

இவரிடம் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர்-1 பேட்ஸ்மேனாக தற்காலத்தில் வரக்கூடிய அளவிற்கு எந்த பேட்ஸ்மேன் இருக்கிறார் என்று ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதில் கூறும் முன்பே, கேள்விக்கு பதில் சொல்வது கடினமானது என்று சொல்லிவிட்டே பேசினார்.

மஹேல ஜெயவர்தனே இதுபற்றி கூறுகையில் ” மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு வர தற்காலத்தில் பாபர் ஆசமிற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரே சீராகத் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். அவர் இயற்கையாகவே மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக தெரிகிறார். அவர் எந்த சூழலுக்கும் தன்னை தகவமைத்துக் கொண்டு சிறப்பாக விளையாடுகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்த பந்தயத்தில் என் பணத்தை நான் பாபர் மேல் தான் வைப்பேன். ஆனாலும் அவரைச் சுற்றி இன்னும் சில தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் பாபருக்கு அழுத்தம் தருவார்கள். களத்தில் பாபர் எந்தச் சூழ்நிலையிலும் மிக இயல்பாக இருக்கிறார். அவரது பேட்டிங் டெக்னிக் எதையும் சமாளிக்கக்கூடியதாய் இருக்கிறது” என்றார்!

- Advertisement -

தற்போது பாபர் ஆசம் மூன்று வடிவ கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளிலும் டி20 போட்டிகளிலும் நம்பர்-1 ரேங்கில் இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், லபுசேன் இருவருக்கும் அடுத்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார். மஹேல ஜெயவர்தன இது குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் பேசும்பொழுது ” அவர் எந்தச் சூழலிலும் சத்தமிடுவதில்லை. மூன்று வடிவ கிரிக்கெட் இருக்கும் தகுந்தமாதிரி அவர் தன்னை மிக எளிதாக மாற்றிக் கொள்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் இதைத்தான் செய்வார். அவருக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று மிகச்சரியாக தெரியும். தேவையான நேரத்திற்கு தன் டெம்போவை மாற்றுவார். பாபருக்கும் இந்த திறமை அப்படியே இருக்கிறது. இதனால் பாபரால் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்திற்கு உயர முடியும் என்று நான் நினைக்கிறேன் ” என்று இதற்கான தன் காரணங்களை விளக்கி கூறினார்!