“தோனி அண்ணாகிட்ட எப்போ பேசினாலும் என்கிட்ட இந்த ஒரு விஷயத்தை சொல்லிட்டு இருப்பார்” – பாகிஸ்தான் போட்டிக்கு முன்பு சாய் சுதர்ஷன் பேச்சு!

0
270
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 21 வயதான இளம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் மிகவும் முக்கியமான ஒரு வீரராக இருக்கிறார். அவரது பேட்டிங் திறமையும், பொறுப்பெடுத்துக் கொண்டு ஆடும் மனநிலையும், அவர் குறித்து நல்ல அபிப்பிராயங்களை எல்லோரது மத்தியிலும் ஏற்படுத்தி இருக்கிறது!

உள்நாட்டு கிரிக்கெட்டில் தமிழக அணிக்காகவும் தென் மண்டல அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும், டிஎன்பிஎல் தொடரில் கோவை லைக்கா கிங்ஸ் அணிக்காகவும் சாய் சுதர்சன் விளையாடுகிறார்.

- Advertisement -

சாய் சுதர்சன் 8 முதல் தர போட்டிகளில் விளையாடி 598 ரன்களை 48 ஆவரேஜில் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடக்கம். பதினைந்து லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள சாய் சுதர்சன் 855 ரன்களை 66 ஆவரேஜில் எடுத்திருக்கிறார். இதில் நான்கு சதங்கள் மூன்று அரை சதங்கள் அடக்கம்.

தற்பொழுது இலங்கையில் நடைபெற்று வரும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்று துவக்க வீரராக விளையாடி வரும் சாய் சுதர்சன், லீக் சுற்றில் நேபாள் அணிக்கு எதிராக அரை சதமும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதமும் விளாசி அசத்தியிருக்கிறார்.

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி வென்று இறுதிப் போட்டியில் இன்று மதியம் பாகிஸ்தான் அணியை சந்திக்க இருக்கிறது. நீண்ட நாட்களாக பெரிய கோப்பைகள் எதுவும் இந்திய அணிக்கு சமீபத்தில் கிடைக்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக சாய் சுதர்சன் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருடன் உரையாடியது குறித்தும், அவர்கள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டு பேசி இருக்கிறார்.

சாய் சுதர்ஷன் மகேந்திர சிங் தோனி குறித்து கூறும் பொழுது ” மகி பாய் எப்பொழுதும் அமைதியானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். நான் அவரிடம் பேசும் பொழுதெல்லாம்
அவர் என்னிடம் ‘ உங்களைப் பற்றியும் உங்களால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை பற்றியும் நீங்கள் மிக நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என்று கூறுவார். வேறு முயற்சி செய்வதை விட, வேறு ஒருவராக இருப்பதை விட இது மிகவும் முக்கியமானது.

விராட் பாயின் மனம் மிகவும் வலிமையானது. அதனால் நான் அவரிடம் இருந்து இந்தப் பண்பை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். நான் அவரிடமும் உரையாடி இருக்கிறேன்!” என்று பாகிஸ்தானுக்கு எதிரான மிக முக்கியமான ஒரு இறுதிப் போட்டிக்கு முன்பாக கூறியிருக்கிறார்!