இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தற்போது வெற்றி பெற்று இருக்கிறது.
இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் கடைசி ஒரு நாள் போட்டி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடர் சமநிலையில் இருந்தன. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பார்படாசில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரன் சால்ட் 74 ரன்கள், மௌஸ்லீ 57 ரன்கள், சாம் கரண் 40 ரன்கள் குவிக்க இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஆர்ச்சர் 17 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் மூன்று சிக்சர்கள் என 38 ரன்கள் குவித்தார். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லெவிஸ் 19 ரன்னில் வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கிங் மற்றும் மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் கேர்ட்டி ஆகியோர் நிலைத்து நின்று இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி
பிரேன்டன் கிங் 117 பந்துகளை எதிர் கொண்டு 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 102 ரன்கள் குவிக்க மூன்றாவது வரிசை ஆட்டக்காரர் கேர்டி 114 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 15 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 128 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இந்த இருவர் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 203 பந்துகளில் சிறப்பாக விளையாடி 209 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரோஹித் சர்மா விஷயத்துல.. கவாஸ்கர் இப்படி பேசக்கூடாது.. அவருக்கு இதுதான் முக்கியம் – ஆஸி ஆரோன் பின்ச் கருத்து
இதன் மூலமாக 43 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது.