பாகிஸ்தான் அணிக்கு எதிராக முல்தானில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் புதிய வரலாறு படைத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்தது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பித்தது.
சுழலுக்கு அதிக சாதக ஆடுகளம்
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 163 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். ஒன்பது ரன்கள் முன்னிலை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பந்துவீச்சில் ஜோமைல் வாரிக்கன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
வெஸ்ட் இண்டீஸ் சிறப்பான பேட்டிங்
இதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய கடினமான சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 244 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தியது. அந்த அணியின் கேப்டன் தொடக்க ஆட்டுக்காரருமான கிரேக் பிராத்வெய்ட் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் நோமன் அலி மற்றும் சஜித் கான் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதையும் படிங்க : இங்கி 3வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள்.. அந்த தவறை சரி செய்வாரா கம்பீர்?
இதைத்தொடர்ந்து 254 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி இன்று மூன்றாவது நாள் முதல் செசனில் 133 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 34 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, முல்தான் மைதானத்தில் புதிய வரலாறு படைத்தது. அந்த அணியின் ஜோமைல் வாரிக்கன் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.






