நேற்று அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 256 ரன்கள் குவித்து அசத்தியது. தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து அணியும் சரியான போட்டியை கொடுக்க ஒரு கட்டத்தில் பரபரப்பாக மாறியது.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிவிட்டு, பின்பு இங்கிலாந்து சென்று ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியது. இதைத் தொடர்ந்து மீண்டும் அயர்லாந்து திரும்பி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
4 ஓவரில் 81 ரன்
இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் எவின் லீவிஸ் 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 91 ரன்கள், கேப்டன் ஷாய் ஹோப் 27 பந்தில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்து அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள்.
இதைத் தொடர்ந்து மிடில் வரிசையில் கேசி கார்தி அதிரடியாக விளையாடி 22 பந்தில் 49 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது. அயர்லாந்து பந்துவீச்சில் லியாம் மெக்கார்தி நான்கு ஓவர்கள் பந்துவீசி 81 ரன்கள் விட்டுத் தந்தார். இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது மோசமான பந்துவீச்சாக அமைந்தது.
போராடிய அயர்லாந்து
இதைத் தொடர்ந்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு ரோஸ் அடைர் 36 பந்தில் 48 ரன்கள், ஹாரி டெக்டர் 25 பந்தில் 38 ரன்கள், மார்க் அடைர் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடுமையாக போராடினார்கள். ஒரு கட்டத்தில் போட்டி மிக நெருக்கமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : 25 பந்து 59 ரன்.. பஞ்சாப் பவுலர் மேஜிக் பேட்டிங்.. மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் சோகம்.. மீண்டும் தோல்வி
இந்த நிலையில் இறுதியாக அயர்லாந்து அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. அந்த அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் அகேல் ஹுசைன் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.






