பயத்தைக் காட்டிய வெஸ்ட் இண்டீஸ் ; பேட் செய்ய வராத கோலி; ஒருவழியாக ஜெயித்த இந்தியா!

0
2152
Indvswi2023

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது!

இன்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இஷான் கிஷான் வாய்ப்பு பெற்றார். சாகல் இடத்தில் குல்தீப் கொண்டுவரப்பட்டார். மேலும் இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் அறிமுகமானார்.

- Advertisement -

போட்டி நடைபெற்ற ஆடுகளம் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களின் அணுகுமுறையும் மிக மோசமாக இருந்தது. ஓரளவுக்கு வேகப்பந்துவீச்சில் சமாளித்த வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், சுழற் பந்துவீச்சை இந்திய கேப்டன் அறிமுகப்படுத்தியதும் ஒட்டுமொத்தமாக விழுந்தார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்திருந்தது. ஆனால் அடுத்த 29 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து 23 ஓவர்களில் 114 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் மட்டுமே 45 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் நான்கு, ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

குறைந்த ரன்கள் இழக்காத இருக்க இந்திய அணிக்கு துவக்கம் தர ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கில் உடன் இசான் கிஷான் வந்தார். கில் ஏழு ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து விராட் கோலிக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் வந்து 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா 5 ரண்களில் வெளியேற ரவீந்திர ஜடேஜா விளையாட வந்தார்.

- Advertisement -

துவக்க வீரராக வந்த இஷான் கிஷான் வாய்ப்பை பயன்படுத்தி 46 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் ஆட்டம் இழந்த பின்பும் விராட் கோலி வராமல் சர்துல் தாக்கூர் களம் இறக்கப்பட்டார். அவர் ஒரு ரன்னில் ஆட்டம் இழக்க அடுத்து ரோகித் சர்மா களத்திற்கு வந்து ஆட்டம் இழக்காமல் 12 ரன்கள் எடுக்க, ஜடேஜா 16 ரன்கள் உடன் களத்தில் நிற்க, 22.5 ஓவரில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மிக எளிதாக இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென்று வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் ஐந்து விக்கெட்டுகளை பறித்து ஆட்டத்தில் ஒரு சின்ன பயத்தை உருவாக்கி விட்டது. அதே சமயத்தில் பேட்டிங்கில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க வேண்டிய இந்திய அணியின் கேப்டன், டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்யாதது தற்பொழுது சமூக வலைதளத்தில் விமர்சனம் ஆகி வருகிறது.