பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக விளையாடி 254 ரன்கள் இலக்காக நிர்ணயித்து வெற்றி முகத்தில் இருக்கிறது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 20 விக்கெட்டுகள்
நேற்று முல்தான் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு பந்துவீச்சாளர் குடகேஷ் மோட்டி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் தரப்பில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் நோமன் அலி 6 விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி ஏமாற்றம் அளிக்கும் வகையில் வெறும் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி 9 ரன்கள் முன்னிலை பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சில் ஜொமைல் வாரிக்கன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
பேட்டிங்கில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ்
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பிரத்வெயிட் 52, அமீர் ஜாங்கோ 30, டெவின் இம்லாக் 35, சின்கிளேயர் 28, மோட்டி 18 ரன்கள் எடுக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 66.1 ஓவரில் 243 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் மற்றும் நோமன் அலி தலா 4 விக்கெட் வீழ்த்தினார்கள். பாகிஸ்தான் அணிக்கு 254 ரன்கள் இலக்கு நிர்வகிக்கப்பட்டது. சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது.
இதையும் படிங்க : ஆர்ச்சர் பந்துவீச்சை குறி வைத்து அடித்தேன்.. அதுக்கு பின்னாடி இந்த காரணம் இருக்கு – திலக் வர்மா விளக்கம்
இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் 2, முகமது ஹுரைரா 2, பாபர் அசாம் 31, கம்ரன் குலாம் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். களத்தில் சவுத் ஷகில் 13, காசிப் அலி 1 நிற்கிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு ஆறு விக்கெட் கைவசம் இருக்க, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 நான்கு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 178 ரன்கள் தேவைப்படுகிறது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் கையே இந்த போட்டியில் ஓங்கி இருக்கிறது.