2024ஆம் ஆண்டு ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் மிக முக்கியமான போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் எழுந்திருக்கிறது.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூயார்க் நாசாவ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தி இருந்தது.
இதற்கு அடுத்து பாகிஸ்தான அணி தனது முதல் போட்டியில் அனுபவம் இல்லாத அமெரிக்க அணிக்கு எதிராக டல்லாஸ் மைதானத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் நியூயார்க் நாசாவ் மைதானத்தைச் சுற்றிலும் போட்டி நடைபெறும் காலை 10 மணி முதல் 40 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. அங்கு மதியம் ஒரு மணி அளவில் மழை வாய்ப்பு 30 சதவீதம் என குறைந்து, மீண்டும் மாலை 4 மணி அளவில் 50 சதவீதம் மழை பெய்யும் எனக் கூறப்படுகிறது.
மேலும் போட்டி நடைபெறும் நாளில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இத்தோடு காற்றில் ஈரப்பதத்தின் அளவு 58 சதவீதம் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக ரசிகர்களுக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் முழுமையான போட்டி கிடைக்காது என்கின்ற வருத்தமான செய்தி வெளிவருகிறது.
இதையும் படிங்க : 137 ரன்.. புது வரலாறு படைத்த கனடா.. பாகிஸ்தானுக்கு நடந்த நல்லது.. அயர்லாந்து அணி மீண்டும் தோல்வி
அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்காக ஐசிசி டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியை அமெரிக்க நாட்டில் நடத்துகிறது. இதன் காரணமாகவே இந்தியா பாகிஸ்தான் அணி மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டியையும் அமெரிக்காவில் நடத்துகிறது. இதற்காக நியூயார்க் நகரத்தில் மிக வேகமாக புதிய மைதானம் கட்டி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணி மோதிக் கொள்ளும் போட்டி முழுமையாக நடைபெறாது என்பது எல்லோரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.






