இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, முக்கிய வீரர்கள் எல்லோரும் சேர்ந்து பயணிக்கும் முதல் சுற்று பயணமாக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணம் அமைந்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர், மேலும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என விளையாடுகிறது.
இதற்காக இரு அணி தேர்வுக் குழுவுமே சில நாட்களுக்கு முன்பு அணிகளை அறிவித்திருக்கின்றன. இந்திய அணி மூன்று வடிவ தொடர்களுக்கும் மூன்று கேப்டன்களை அறிவிக்க, தென் ஆப்பிரிக்கா டெம்பா பவுமாவை டெஸ்ட் அணிக்கு மட்டும் கேப்டனாக விட்டு, மற்ற இரண்டு வடிவங்களுக்கும் மார்க்ரம்மை கேப்டன் ஆக்கி இருக்கிறது.
கடந்த முறை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல் ராகுல் என இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதல் போட்டியை வென்ற இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளையும் வென்று தோற்றது. ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்று போட்டிகளையும் தோற்றது. மேலும் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் அங்குதான் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பார்வையில் கடந்த இரண்டு முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தினால், இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதோடு, சாம்பியன் ஆகவும் வரவேண்டும் என்பதில் குறியாக இருக்கும்.
மேலும் இதுவரை இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த முறை சிறந்த வாய்ப்பு கிடைத்தும் அதை இந்திய அணி தவறவிட்டது. இந்த முறை வரலாற்றை மாற்றி படைக்க இந்திய அணி விரும்பும்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளர் சோக்ரி கான்ராட் கூறும்பொழுது “இது ஒரு புதிய ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் தொடக்கமாகும். அதுவே அனைவருக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கிறது. ஆடுகளம் இரண்டு அணிகளுக்குமே சமமாக இருக்கும். நாங்கள் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் தொடக்கத்தை எங்களது நாட்டில் இருந்தே வலிமையாக முன்னெடுக்க விரும்புகிறோம். மோதிக் கொள்வது உலகின் சிறந்த இரண்டு அணிகள்.
ஒட்டுமொத்தமாக எங்கள் குழு தென் ஆப்பிரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான சாதனை மற்றும் பெருமையை தக்க வைத்துக் கொள்ளும். எங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான எல்லா திறமைகளும் எங்கள் குழுவிற்கு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!