“நாங்க இந்த மாதிரி பரபரப்பான கேமை மட்டும்தான் விரும்பறோம்!” – புது கேப்டன் சாம் கரன்!

0
932
Sam curran

ஐபிஎல் பதினாறாவது சீசனில் இன்று இரண்டு போட்டியில், இரண்டாவது போட்டியில் லக்னோ அணியும் பஞ்சாப் அணியும் லக்னோ மைதானத்தில் மோதிக்கொண்டன. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் மூன்று பந்துகள் மீதம் வைத்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் ஒரு முனையில் பொறுப்பாக விளையாடி 56 பந்தில் 74 ரன்கள் எடுத்துக் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 159 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு மேத்யூ ஷார்ட் 22 பந்தில் 34 ரன்கள், சிக்கந்தர் ராஸா 41 பந்தில் 57 ரன்கள், கடைசி கட்டத்தில் ஆட்டம் இழக்காமல் ஷாருக்கான் 10 பந்தில் 23 ரன்கள் எடுக்க பஞ்சாப் அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் கடந்த போட்டியின் போது காயமடைந்த கேப்டன் ஷிகர் தவான் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட சாம் கரன் கேப்டன் பொறுப்பை ஏற்று முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய கேப்டன் சாம் கரன் “இது ஒரு அற்புதமான வெற்றி. இந்த அணி இப்படியான நெருக்கமான பரபரப்பான போட்டிகளை விரும்புகிறது. இது சரியான போட்டியாக இல்லாவிட்டாலும் இறுதியில் வெற்றி கிடைத்தது நல்ல விஷயம். தோழர்கள் நன்றாக பந்து வீசினார்கள். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இறுதி வரை நாங்கள் பந்து வீசிய விதம் நன்றாக இருந்தது. ஆட்டத்தில் பனி உள்ளே வந்த பொழுதும், விக்கெட்டில் பந்து வீச்சுக்கு கொஞ்சம் உதவி இருந்தது!” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” நடு வரிசையில் சிக்கந்தர் ராஸா நன்றாக விளையாடினார். ஷாருக் உள்ளே வந்து முடித்த விதம் நன்றாக இருந்தது. ட்ரெஸ்ஸிங் ரூமை சுற்றி உள்ள பேச்சு என்னவென்றால், அவர் மிகவும் கடினமாக உழைத்து உள்ளார் என்பதுதான். மேலும் அவருடைய ரோல் என்ன என்பதில் பயிற்சியாளர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மைதானத்தின் டைமென்ஷன்கள் வெவ்வேறு மாதிரியான அளவை கொண்டவை. எனவே நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு புதுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். எங்களது ரிதம் நன்றாக உள்ளது. ஆறு ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினோம். எங்களிடம் இப்படி நிறைய விருப்பங்கள் இருக்கிறது இது எங்களுக்கு நல்ல விஷயம்!” என்று கூறி முடித்திருக்கிறார்!