அடுத்தடுத்த தொடர்களை இழக்கும் ராகுல் டிராவிட் & கோ ! ” வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தும் கோட்டைவிட்டு விட்டோம் ” விளக்கம் அளிக்கும் இந்திய பயிற்சியாளர்

0
173
Virat Kohli and Rahul Dravid

இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ஒரு டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. முதலில் விளையாட இருந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின் போது, கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட, அவர் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனை அடுத்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டிக்கான டாஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக் வென்று, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அவரது இந்த முடிவு சரி என்பது போல், இந்திய அணி 98 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதற்கடுத்து ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடோஜா ஜோடி 222 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இருவரும் சதம் விளாசி இந்திய அணியை 416 என்ற பெரிய இலக்கத்தை எட்ட வைத்தார்கள். இதற்குப் பிறகு களம் கண்ட இங்கிலாந்து அணி 284 ரன்களுக்கு சுருண்டது. ஜானி பேர்ஸ்டோ சதம் அடித்தார். இந்திய அணி 132 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இந்த முறை இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணியின் மோசமான பேட்டிங் தொடர்ந்தது. ரிஷாப் பண்ட் மட்டுமே தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொதப்ப இந்திய அணி 245 ரன்களில் அடங்கியது. இதனால் 378 என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்திற்கு துவக்க ஆட்டக்காரர்கள் நூறு ரன் துவக்கத்தைத் தந்தார்கள். இதற்கடுத்து களம் கண்ட ஜோ ரூட் , ஜானி பேர்ஸ்டோ இருவரும் சதம் அடிக்க, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெகு எளிதாய் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. தொடர் 2-2 என சமனில் முடிந்தது!

ஆட்டம் முடிவுக்குப் பிறகு இதுகுறித்துப் பேசியுள்ள இந்திய அணியின் தலைமைப் பயின்சியாளர் ராகுல் டிராவிட் “நான் தோல்விக்குச் சாக்கு சொல்ல விரும்பவில்லை. நான் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இந்திய அணியின் ஒரு அங்கமாக இல்லை. இங்கிலாந்து சற்று வேறு மாதிரியான சூழலில் இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இப்போது நியூசிலாந்து அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளை வென்று வந்திருக்கிறார்கள். ஆனால் நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி அதிக நாட்கள் ஆகி இருந்தது. ஆனாலும் இதைச் சாக்காகக் கூறவில்லை” என்றார்.

மேலும் தொடர்ந்து பேசியராகுல் டிராவிட் “அவர்கள் போட்டியின் ஐந்து நாட்களும் நன்றாக விளையாடினார்கள். முதல் மூன்று நாட்கள் நாங்கள் நன்றாக விளையாடினோம். அதை நாங்கள் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவில்லை. இதனால்தான் டெஸ்ட் போட்டி கடினமாக ஒன்றாக இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் வெல்ல தொடர்ந்து ஐந்து நாட்களும் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம். இந்தப் போட்டியில் இதை எங்களால் சரியாகச் செய்ய முடியவில்லை. அவர்கள் சரியாகச் செய்தார்கள். இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள்” என்று தெரிவித்து இருக்கிறார்!

- Advertisement -