இதை செய்ய நாங்கள் தவறிவிட்டோம், இல்லைனா இந்தியாவால் நிச்சயம் ஜெயிச்சிருக்க முடியாது; எதிரணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் ஆவேசம்!

0
111

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தோல்வியை தழுவிய பிறகு எதிரணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் ஆவேசமாக பேட்டி அளித்தார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய இரு அணிகளும் மோதிய மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு துவக்க வீரர் பிரண்டன் கிங் 20 ரன்களுக்கும் அதற்கு அடுத்ததாக வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கும் ஆட்டம்மிழக்க மற்றொரு துவக்க வீரர் கைல் மேயர் மிகச் சிறப்பாக விளையாடி 50 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் நான்கு சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். 

- Advertisement -

இறுதியில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை மேற்கிந்திய தீவுகள் அணி அடித்திருந்தது. இந்த மைதானத்தில் இதுவரை 165 ரன்கள் எந்த அணியும் சேஸ் செய்ததில்லை. சற்று கடினமான இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மாவிற்கு திடீரென காயம் ஏற்பட, அப்போதே மைதானத்தில் இருந்து வெளியேறினார். நங்கூரம் போல் நிலைத்து ஆடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் கடந்து 76 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த தீபக் ஹூடா 10 ரன்களும் ரிஷப் பன்ட் 33 ரன்களும் அடிக்க இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தழுவியது. 

போட்டி முடிந்தபிறகு சற்று ஆவேசமாக காணப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரான் தனது பேட்டியில் குறிப்பிட்டதாவது: “ஆரம்பத்திலேயே ஒரு சில விக்கெட்டுகளை நிச்சயம் வீழ்த்தியிருக்க வேண்டும். நாங்கள் அதை செய்ய தவறிவிட்டோம். நிறைய ரன்கள் அடித்துவிட்டோம் என நினைத்தேன். அது தவறாக முடிந்துவிட்டது. இந்த 165 ரன்கள் எட்டுவது மிகவும் கடினமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அவர்களிடம் விக்கெட்டுகள் கையில் இருந்ததால் அதனை எளிதாக சேஸ் செய்துவிட்டார்கள். நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுக்க தவறிவிட்டு, இந்த போட்டியை கடினமானதாக மாற்றிக் கொண்டோம். இன்னும் 10 – 15 ரன்கள் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்கலாம், இப்போட்டியை தலைகீழாக மாற்றி இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.” என்றார்.

இவ்விரு அணிகளும் மோதும் நான்காவது டி20 போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி ஃப்ளோரிடா மைதானத்தில் துவங்குகிறது.

- Advertisement -