கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“நாங்களும் மனுஷங்கதான்.. இதுல விரக்தி அடையறதுல அர்த்தம் இல்ல!” – முகமது சமி ஓபன் ஸ்பீச்!

நேற்று இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று இருக்கிறது!

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியை 276 ரன்களுக்கு தடுத்து நிறுத்தி, இந்திய அணி 48.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இந்திய தரப்பில் பந்துவீச்சில் முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். நேற்றைய போட்டியில் அவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த போட்டி குறித்து பேசி உள்ள அவர் கூறுகையில் “அதிகமான வெப்பத்தை பற்றி யாரும் பேசுவது கிடையாது. நாங்களும் மனிதர்கள்தான். விக்கெட்டில் எதுவுமில்லாத பொழுது நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. நாம் எவ்வளவு ஓவர்கள் வீச வேண்டும் என்பதை வெப்பம்தான் முடிவு செய்கிறது. வெப்பம் ஆட்டத்தில் நிச்சயம் ஒரு காரணியாகும். நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு காலம் விளையாடும் பொழுது, இதை தவிர்க்கவும் முடியாது.

- Advertisement -

நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடும் பொழுது எப்பொழுதும் ரிதத்தில் இருப்பேன். நான் தொடர்ச்சியாக ஏழு, எட்டு மாதங்களாக கிரிக்கெட் விளையாடி வருகின்ற காரணத்தினால், எனக்கு ஒரு சிறிய ஓய்வு தேவைப்பட்டது. இதுகுறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் உடன் ஆலோசனை செய்தேன்.

மேலும் ஓய்வு என்பது தொழில்நுட்ப ரீதியாக ஓய்வு பெறுவது கிடையாது. ஏனென்றால் நான் வீட்டில் இருந்தாலும் என்னுடைய தயாரிப்புகள் தொடர்ந்து அதிகமாக நடக்கும். பயிற்சி மற்றும் கண்டிஷனிங்கான அமைப்பு முழுதாக உள்ளது.

உலகக் கோப்பை மாதிரியான தொடருக்கு முன் ஒரு பெரிய அணிக்கு எதிராக நீங்கள் சிறப்பாக விளையாடுவது முக்கியம். நம்பிக்கைதான் எல்லாமே. பெரிய தொடருக்கு முன் இப்படியான ஊக்கத்தை பெறுவது சிறப்பான ஒன்று. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் சிறப்பாக இருக்கிறது. இது சிறப்பான தயாரிப்பு என்று நினைக்கிறேன்.

விளையாடாமல் பெஞ்சில் இருப்பது என்பது விளையாட்டின் ஒரு பகுதி. இது அணியின் தேவைகளை பற்றியது. மேலும் நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் எப்பொழுதும் பிளேயிங் லெவனில் ஒரு பகுதியாக இருக்க முடியாது. யாரோ ஒருவர் விளையாடும் பொழுது யாரோ ஒருவர் வெளியில் உட்காரத்தான் வேண்டும். இதைப்பற்றி விரக்தி அடைவதில் அர்த்தம் கிடையாது. நீங்கள் வெளியில் இருக்கும் பொழுது அதை புரிந்து கொள்வது மிக முக்கியம். ஏனென்றால் அந்த ரோலும் அவசியமான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -
Published by