நடுவர் அவுட் கொடுக்காத போதும் களத்தை விட்டு வெளியேறிய ஜெய்ஸ்வால் ; குழப்பத்தில் நடுவர் – வீடியோ இணைப்பு

0
63
Yashasvi Jaiswal

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில், மும்பை, மகாராஷ்ட்ராவின் நான்கு மைதானங்களில் எழுபது லீக் போட்டிகளும் முழுமையாக முடிவடைந்து இருக்கின்றன. குஜராத் அணி 10 வெற்றி 20 புள்ளிகளோடு முதல் இடத்தையும், ராஜஸ்தான் அணி 9 வெற்றி 18 புள்ளிகளோடு ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தையும், லக்னோ அணி 9 வெற்றி 18 புள்ளிகளோடு மூன்றாவது இடத்தையும், பெங்களூர் அணி 8 வெற்றி 16 புள்ளிகளோடு நான்காவது இடத்தையும் பெற்று ப்ளேஆப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கின்றன.

லீக் போட்டிகள் மும்பை, மகாராஷ்ட்ரா மைதானங்களில் நடந்திருக்க, குவாலிபையர், எலிமினேட்டர் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடக்கிறது. அடுத்த குவாலிபையர், இறுதி போட்டி குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் நடக்கிறது.

இன்று முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதும் முதல் குவாலிபையருக்கான போட்டிக்கான டாஸில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிமுமுறை டாஸ் தோற்ற கேப்டன் என்ற வித்தியாசமான சாதனையை ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் செய்தார். குஜராத் அணியில் பெர்குசனுக்குப் பதிலாக அல்ஜாரி ஜோசப் வந்திருக்கிறார். ராஜஸ்தான் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

இதன்படி ராஜஸ்தானின் பேட்டிங்கை துவங்க ஜோஸ் பட்லரும், யாஷ்வி ஜெய்ஷ்வாலும் களம் புகுந்தனர். முதல் ஓவரை மொகம்மத் ஷமி வீச, முதல் பந்தை கால் காப்பில் வாங்கிய ஜெய்ஷ்வால், இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். நான்காவது, ஆறாவது பந்தில் பட்லர் பவுண்டரிகள் அடிக்க அந்த ஓவரில் மொத்தம் ஒன்பது ரன்கள் வந்தது.

இரண்டாவது ஓவரை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் வீச, முதல் நான்கு பந்துகளிலும் ரன் அடிக்க முடியாமல் ஜெய்ஷ்வாலுக்கு ரன் அழுத்தம் உருவானது. ஐந்தாவது பந்தில் சுமாரான ஷாட்டால் இரண்டு ரன்கள் வர, ஆறாவது பந்தை கொஞ்சம் அவுட் ஸ்விங்கோடு வெளியில் வீசினார் யாஷ் தயால். அதை கவரில் அடிக்க ஜெய்ஷ்வால் பேட்டை சுழற்ற, பந்து எட்ஜ் எடுத்து கீப்பர் சஹா பிடிக்க, குஜராத் வீரர்கள் அவுட் அப்பீலை வைக்க, அம்பயர் அவுட் தரவில்லை. ஆனால் இளம் இந்திய வீரரான ஜெய்ஷ்வால், ஐ.பி.எல் குவாலிபையர் போன்ற முக்கியமான ஆட்டத்தில் தானாகவே அவுட் என்று களத்திலிருந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். இது வர்ணனையாளர்கள் வரை அவரை பாராட்ட வைத்த நிகழ்வாய் அமைந்தது!