விக்கெட்டைப் பறிகொடுத்த விரக்தியில் வானத்தைப் பார்த்துக் கத்திக் கொண்டே வெளியேறிய விராட் கோலி – வீடியோ இணைப்பு

0
535
Virat Kohli shouting towards sky

கடந்த தசாப்தத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் யாரென்று கேட்டால், விராட் கோலியைத் தைரியமாகக் கைக்காட்டலாம். ஆனால் கொரோனா தாக்குதலுக்குப் பிறகு, 2020 ஆண்டிலிருந்து அவரது பேட்டிங் கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து, இன்றைய அளவில், நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வினின் பேட்டிங் சராசரிக்கு கீழ் அவருடைய பேட்டிங் சராசரி வருமளவிற்கு சரிந்திருக்கிறது.

சில வருடங்களாக அவரிடமிருந்து சதங்களை எதிர்பார்த்திருந்த இரசிகர்கள், தற்போது 30+ ரன்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதே ஐ.பி.எல் தொடரில் 2016ஆம் சீசனில் கிட்டத்தட்ட 1000 ரன்களை, நான்கு சதங்களோடு அடித்து நொறுக்கியவர் விராட்கோலி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சதங்களை தினசரி செய்தியாகக் கொடுத்துக் கொண்டிருந்தவர். இன்றைய அவரது பேட்டிங் சரிவை, எதிரணிகளே காண விரும்பாத ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

நேற்று பெங்களூர் பஞ்சாப் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்க, பெங்களூர் பவுலர்கள் ஆரம்பத்தில் பேக் ஆப் த டெலிவரிகளாக வீச, பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டே விளாசி தள்ளிவிட்டார். அடுத்து வந்த இன்னுமொரு இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனும் அடித்து நொறுக்க, பஞ்சாப் அணி இருபது ஓவர்களின் முடிவில் 209 ரன்களை குவித்தது.

அடுத்து 210 என்ற இலக்கோடு களமிறங்கிய பெங்களூர் அணிக்கு, ஆரம்பத்திலேயே இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என விராட்கோலி அதிரடி தொடக்கம் தர, பெங்களூர் இரசிகர்கள் இந்த முறை பழைய விராட்கோலி திரும்பி வந்துவிடுவார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் ககிசோ ரபாடாவின் ஆட்டத்தின் நான்காவது ஓவரில் லெக்ஸைட் நகர்ந்து விராட்கோலி அடிக்க போக, பந்தும் அவரை பின்தொடர்ந்து லெக்ஸைடே வர, வந்த பந்து அவரது கையுறையில் பட்டதோடு இடுப்பிலும் பட்டு, பின்புறமாய் நின்றிருந்த ராகுல் சஹரிடம் எளிமையான கேட்ச்சாய் மாறியது. அப்பீல் செய்து பார்த்த போதும் அவுட் உறுதியானது. கொஞ்சமும் அதிர்ஷ்டம் இல்லாமல் ஆட்டமிழந்து வெளியேறிய விராட்கோலி, கைகளை விரித்து வானத்தைப் பார்த்து, சில வார்த்தைகளை முணுமுணுத்தப் படியே வெளியேறியது, பார்ப்பதற்கே வருத்தமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது!