கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை போல் தாவி குதித்து கொண்டாடிய முகமது சிராஜ் – வீடியோ இணைப்பு

0
778
Mohammad Siraj Celebrating like Ronaldo

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேஎல் ராகுல் 260 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 123 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மயங்க் அகர்வால் 123 பந்துகளில் 60 ரன்கள் குவித்துள்ளார்.

24 ஓவர்களில் 73 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கும் தென் ஆப்பிரிக்க அணி

இந்திய அணி முதல் இன்னிங்சை விளையாடி முடித்தவுடன், தென் ஆப்பிரிக்க அணி அதனுடைய முதல் இன்னிங்சை விளையாட தொடங்கியது. அந்த அணி ஆரம்பத்திலேயே டீன் எல்கரின் விக்கெட்டை இழந்து தடுமாற்றத்துடனே ஆட்டத்தை ஆரம்பித்தது. பின்னர் வந்த மார்க்ரம், பெட்டர்சன் மற்றும் வேன் டெர் டுஸ்சென் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்ட 32 ரன்களிலேயே 4 விக்கெட்டுக்களை இழந்தது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ போல தாவி குதித்த சிராஜ்

வேன் டெர் டுஸ்சென் தென்ஆப்பிரிக்க அணியில் மிக சிறப்பாக விளையாடக் கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஆவார். 17 பந்துகளில் 3 ரன்கள் பிடித்து சற்று நிதானமாக விளையாடி கொண்டிருந்த அவரை முகமது சிராஜ் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலமாக அவுட் ஆக்கினார்.

அவரை அவுட் ஆக்கிய அடுத்த நொடியே வேகமாக ஓடிச்சென்று சிராஜ் துள்ளி குதித்தார். கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் போட்டோவுடன் வேகமாக ஓடிச்சென்று ரசிகர்கள் முன்னிலையில் தாவி குதித்து தனது வெற்றியை கொண்டாடுவார். இன்று அவரது பாணியிலேயே முகமது முகமது சிராஜ் கொண்டாடிய அந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது

- Advertisement -

டீ காக்கின் விக்கெட்டையும் இழந்து தவிக்கும் தென் ஆப்பிரிக்கா

32 ரன்களில் 4 விக்கெட் போன பின்னர், பவுமா மற்றும் டீ காக் இருவரும் இணைந்து நிதானமாக விளையாட தொடங்கினர். இவர்களது நிதானமான ஆட்டம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 100 ரன்களை கடந்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டீ காக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் 34 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

தற்பொழுது அந்த அணி 38 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. களத்தில் பவுமா மற்றும் முல்டர் பேட்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். 218 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆபிரிக்க அணி தற்பொழுது இருப்பது குறிப்பிடத்தக்கது.