கடைசி ஓவரில் தொடர்ந்து யார்க்கர்கள் வீசி எதிரணியை அச்சுறுத்தி ரஷீத் கானின் ஸ்டெம்ப்பை பறக்க விட்ட நட்ராஜன் – வீடியோ இணைப்பு

0
3404
Natarajan yorker to dismiss Rashid Khan

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் முதல் இருநாட்களுக்கான டபுள் ஹெட்டர் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று திங்கள்கிழமை 21-வது ஆட்டம், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் ஹைதராபாத் குஜராத் அணிகளுக்கிடையே நடந்து வருகிறது!

டாஸில் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் குஜராத்தை பேட் செய்ய அழைத்தார். இதன்படி களம் புகுந்த கில்லும், வேட்டும் ஏமாற்ற, அறிமுகப் போட்டியில் அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சனும் ஏமாற்றினார். கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் அரைசதத்தாலும், கர்நாடக வீரர் அபினவ் மனோகரின் அதிர்ஷ்டம் மிகுந்த அதிரடியாலும், இருபது ஓவர்கள் முடிவில் குஜராத் 162 ரன்களை சேர்த்திருக்கிறது.

குஜராத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஏமாற்றினாலும், ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான யார்க்கர் கிங் தமிழகத்தின் நடராஜன் ஏமாற்றவில்லை. தன் முதல் ஓவரை பவர்-ப்ளேவின் கடைசி ஓவரில் வீசி, அந்த ஓவரிலேயே தமிழகத்தின் சாய் சுதர்சனை அவுட் செய்து பெவிலியன் அனுப்பி வைத்தார்.

இதே போல் 170 ரன்களை குஜராத் கடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கடைசி ஓவரை வீசிய நடராஜன் தன் ஆயுதமான தொடர்ச்சியான யார்க்கர்களால், ஹர்திக் பாண்ட்யா கைகளை கட்டிப்போட்டதோடு, அபினவ் மனோகரை ரன்அவுட் செய்தும், கடைசிப்பந்தில் ஹைதராபாத்தின் முன்னாள் பிரபல வீரர் ரஷீத்கானுக்கு லெக்-ஸ்டம்ப் யார்க்கர் அடித்து ஸ்டம்புகளை பிளந்து அனுப்பி வைத்தார்.

இந்தத் தொடரில் ஹைதராபாத் ஆடிய நான்கு ஆட்டங்களும் நடராஜன் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும் குறிப்பிடத்தக்க விசயமாக, காயத்திலிருந்து மீண்டு வந்த நடராஜன், பவர்-ப்ளேவில் சிறப்பாக வீசுவதோடு, ரைட்-ஹேன்ட் பேட்ஸ்மேனுக்கு பந்தை உள்ளேயும் ஸ்விங் செய்ய ஆரம்பித்திருக்கிறார். இந்த முறையில்தான் சென்னை அணியின் ருதுராஜை க்ளூவே இல்லாமல் கிளீன் போல்ட் செய்திருந்தார்!