எளிய ரன் அவுட் வாய்ப்பு தவறியது ; பந்தைக் கீப்பரிடம் வீச முயன்று எங்கோ தூக்கி எறிந்த லலித் யாதவ் – வீடியோ இணைப்பு

0
99
Lalith Yadav misses easy run out of Shikhar Dhawan

2022 ஐ.பி.எல் சீசனில் 64வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும், நவிமும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் யார் வெல்கிறார்களோ அவர்களே ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பீல்டிங்கை தேர்வு செய்தார், இதன்படி டெல்லி இன்னிங்சை பேட்டிங்கில் துவங்க வந்த டேவிட் வார்னர், லியாம் விவிங்ஸ்டனின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

முக்கியமான ஆட்டத்தில் முதல் பந்திலேயே வார்னரை இழந்து டெல்லி அணி அதிர்ச்சிக்கு உள்ளானாலும், மற்றுமொரு துவக்க ஆட்டக்காரராய் புதிதாய் இறக்கப்பட்டிருந்த சர்ப்ராஸ்கான் அதிரடியில் பிரமாதப்படுத்தி 16 பந்தில் 32 ரன்களை துரிதமாய் எடுத்து தந்து அணிக்கு நல்ல துவக்கம் தந்து வெளியேறினார். மிட்செல் மார்ஷ் ஒருமுனையில் நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். ஆனால் முக்கியமான கட்டத்தில் கேப்டன் ரிஷாப் பண்ட்டும், ரோமன் பவெலும் ஏமாற்ற, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களின் முடிவில், இருபது ரன் குறைவாய் 159 ரன்களை 7 விக்கெட் இழப்புக்கு எடுத்தது டெல்லி அணி!

அடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கிய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பேர்ஸ்டோ நல்ல துவக்கத்தையே தந்து ஆட்டமிழந்தார். ஆனால் அவர் வெளியேறியதும் திடீரென்று பஞ்சாப் ஆட்டத்தில் ஒரு குழப்பம் வந்ததுபோல் இருந்தது. ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை லலித் வீச, தவான் பந்தை நேராக தட்டிவிட்டு, ஒருரன் எடுக்க முயல, எதிர்முனையில் நின்ற ராஜபக்சே தவானை பார்க்காமல், பந்தைப் பிடிக்கும் லலித்தை பார்க்க, தவான் பவுலரின் முனைக்கே ஓடி வந்துவிட்டார். ஆனால் பந்தை விழுந்து பிடித்த லலித்தால், அதே நிலையிலிருந்து பந்தை ரிஷாப் பண்ட்க்கு அடிக்க முடியாமல் தவறவிட்டார். இதனால் ஷிகர் தவான் ரன் அவுட்டிலிருந்து தப்பினார்!