வாத்தி ரெய்டு – சச்சினை பார்த்ததும் பள்ளி மாணவன் போல் திகைத்துப்போன இஷான் கிஷான்

0
77
Ishan Kishan

ஐபிஎல் தொடர் தற்போது அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் சிறப்பாக நடந்து வருகிறது. கொரோனா காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடர் தள்ளிப்போனது. தற்போது மீதி உள்ள ஆட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய சென்னை அணி இந்த முறை முதன் முறையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த அடுத்த நிலையில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் உள்ளன. நான்காவது இடத்திற்கான போட்டியில் மும்பை ராஜஸ்தான் கொல்கத்தா போன்ற அணிகள் இருப்பதால் யார் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என்பது இப்போது வரை ரகசியமாகவே இருக்கிறது.

கடந்த ஆண்டு அசைக்க முடியாத அணியாக வலம் வந்த மும்பை அணி இந்த முறை திணறி வருகிறது. முக்கியமாக மும்பை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் சொதப்பி வருவதால் அது ஒவ்வொரு ஆட்டத்திலும் அணிக்கு ஆபத்தாக முடிகிறது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய சூரியகுமார் மற்றும் இஷன் கிஷன் போன்றவர்கள் இந்த முறை சரியாக விளையாடவில்லை. இன்னமும் 3 ஆட்டங்கள் மட்டுமே மும்பை அணிக்கு என்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியுடன் இணையாத அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த முறை இணைந்துள்ளார்.

இந்நிலையில் மும்பை அணியினர் தங்கியிருக்கும் ஹோட்டலில் நடந்த நிகழ்வு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மொத்த அணியினரும் அமர்ந்து இருக்கையில் அணியின் இளம் வீரரான இஷன் கிஷன் கண்ணாடி போட்டுக்கொண்டு ஒரு தைரியமான தோரணையில் வரும்பொழுது அந்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் இருந்ததை அவர் கவனிக்க மறந்து விடுகிறார். திடீரென்று சச்சின் இருப்பதை உணர்ந்த அவர் கண்ணாடியை கழற்றி விட்டு தலை முடியை சரி செய்து விட்டு அவருக்கு மதிய வணக்கம் சொல்வதாக இந்த வீடியோ இருக்கிறது.

இஷன் கிஷனின் இந்த செயலால் மும்பை அணி வீரர்கள் மொத்தமும் விழுந்து விழுந்து சிரிக்கின்றதாக இந்த வீடியோ அமைந்துள்ளது. சச்சின் ஓய்வு பெற்று கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் மும்பை வீரர்களுக்கு மத்தியில் அவருக்கு இருக்கும் மதிப்பையும் மரியாதையும் இந்த வீடியோ விளக்கும் வண்ணம் ஆக இருக்கிறது.