பந்து ஸ்டெம்பில் பட்டும் பெயில்ஸ் கீழே விழாதாதால் நாட் அவுட் ; ஆச்சர்யத்தில் டேவிட் வார்னர் – வீடியோ இணைப்பு

0
103
David Warner DC

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் 58வது ஆட்டத்தில், ராஜஸ்தான் டெல்லி அணிகள், நவி மும்பையின் டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி இருந்தன. லீக் போட்டிகள் 75% முடிந்திருக்கும் நிலையில், நேற்றைய இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பிற்கான மிக முக்கிய போட்டியாக அமைந்திருந்தது. ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலும், டெல்லி அணி புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்திலும் இருந்தது.

நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமாக இருக்கும் ஜாஸ் பட்லரை சேத்தன் சகாரியா ஆரம்பத்திலேயே வீழ்த்தினார். இதனால் மூன்றாம் இடத்தில் அனுப்பப்பட்ட அஷ்வின் மிகச் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் அரைசதமடித்து, முக்கிய பேட்ஸ்மேன்களிடம் ஆட்டத்தை எடுத்துச் சென்று தந்தார். ஆனால் ஹெட்மயர் இல்லாத இந்த ஆட்டத்தில் கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், வான்டெர் டஸன் மூவருமே இறுதிக்கட்டத்தில் சொதப்ப, ராஜஸ்தான் அணி ஒரு 15 குறைவாக, இருபது ஓவர்களின் முடிவில் 160 ரன்களே எடுத்தது.

பின்பு 161 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் ஸ்ரீகர் பரத்தை முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் டிரென்ட் போல்ட். அதற்குப் பின்பு ஜோடி சேர்ந்த வார்னரும்-மிட்ச்செல் மார்சும் ராஜஸ்தான் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிவிட்டனர். குறிப்பாக மிட்ச்செல் மார்சின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் 62 பந்துகளில், 7 சிக்ஸர், 4 பவுண்டயோடு 89 ரன்களை குவித்தார். வார்னர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 52 ரன் எடுத்தார். இந்த ஜோடி 144 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. மிட்ச்செல் மார்ஸே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆட்டம் யார் பக்கமும் திரும்பியிருக்காத நேரத்தில், சாஹல் வீசிய பந்து சுழன்று, வார்னரின் லெக் ஸ்டம்பை தாக்க, பைல்சில் இருக்கும் லைட்டும் எரிந்தது. ஆனால் பைல்ஸ் கீழ விழாததால் வார்னர் அவுட்டிலிருந்து தப்பித்தார். இது மட்டும் பைல்ஸ் விழுந்திருந்து வார்னர் அவுட் ஆகியிருந்தால், ஆட்டம் ராஜஸ்தான் பக்கமும் திரும்பி இருக்க வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் என்னவோ நேற்று டெல்லி பக்கம்தான் இருந்தது!