வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி ரன்கள் குவித்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஒருநாள் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் தனது ஆதரவான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களம் கண்ட மூத்த வீரர் ரோஹித் சர்மா, முதல் போட்டியில் 32 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் 101 மற்றும் 92 ரன்கள் குவித்து அசத்தினார். சமீபத்தில் சுப்மன் கில்லிடம் ஒருநாள் கேப்டன்சி பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போதிலும், ரோஹித்தின் இந்தத் தொடர் பார்ம் அவர் இன்னும் சிறந்த நிலையில் இருப்பதை நிரூபித்துள்ளது.
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அவரது தற்போதைய பேட்டிங் பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்டர் வசீம் ஜாஃபர் தனது யூடியூப் சேனலில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து வசீம் ஜாஃபர் பேசும்போது “ரோஹித் சர்மாதான் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும்; 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரை நிர்வாகம் அவர் மீதே நம்பிக்கை வைத்து தொடர்ந்திருக்க வேண்டும்; இந்த உலகக் கோப்பை தொடர் முடிந்த பிறகே அவர்கள் சுப்மன் கில்லிடம் பொறுப்பை ஒப்படைத்து பேட்டன் வழங்கி
இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்”.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மூன்றாவது போட்டியில் ரோஹித் சர்மா சதத்தை தவறவிட்ட போதிலும், அணிக்குத் தேவையான நேரத்தில் அவர் அளித்த அதிரடி தொடக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.