வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த அதிரடி சதத்திற்கு பிறகு, கேப்டனாகவும் பேட்டராகவும் அவருடைய தன்னம்பிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கிரிஸ் ஸ்ரீகாந்த் பாராட்டி பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்து 42 பந்துகளில் தனது அறிமுக டி20 சதத்தை பதிவு செய்தார். இறுதியில் அவர் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 15 ஓவர்களிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த இன்னிங்ஸ் குறித்து கிரிஸ் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசும்போது “இந்த இன்னிங்ஸ் ஐயருக்கு ஒரு பேட்டராகவும் கேப்டனாகவும் மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும். இதுதான் கில்லுக்கும் நடந்தது. அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரன்கள் அடிக்கத் தொடங்கியவுடன், மைதானத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினார். இனிவரும் நாட்களில் டி20 போட்டிகளிலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இதே விஷயம் தான் நடக்கும். இனிமேல் அவரது தலைமையின்கீழ் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்படத் தொடங்கும்.” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தொடர்ந்து பேசிய ஸ்ரீகாந்த் “அவரது இந்த சதம் அவருக்கு மட்டுமல்லாமல், பெரிய அளவில் இந்திய அணிக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் ஒரு கேப்டனாக அவர் இன்னும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தாமல் இருந்தார். கடந்த 10 இன்னிங்ஸ்களில் அவர் பெரிய அளவில் ரன்கள் எதுவும் அடிக்கவில்லை. ஸ்ரேயாஸின் ஆஃப் சைடு ஷாட்களும் அவருடைய வரம்புகளும் நம்பமுடியாதவை மற்றும் மிகவும் சுலபமானவை. அவர் பந்தை தாமதமாக விளையாடியதால் அவருக்கு நிறைய நேரம் கிடைத்தது.” என்று கூறி இருக்கிறார்.
அடுத்து ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து விளையாடிய இஷான் கிஷன் பற்றி பேசிய ஸ்ரீகாந்த் “இந்திய அணி இரண்டு விரைவான விக்கெட்டுகளை இழந்ததால் இது ஒரு முக்கிய பார்ட்னர்ஷிப் ஆகும். இந்தியா மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தால் சிக்கலில் சிக்கியிருக்கும். இவர்கள் இருவருமே பந்தை தாமதமாகவே விளையாடினார்கள். இஷான் கிஷன் ஐயருக்கு அதிக ஸ்ட்ரைக் கொடுத்து அவருக்கு மிகச்சிறப்பாக சப்போர்ட் செய்தார். கிஷன் வழக்கமான தனது அதிரடி ஆட்டத்தை ஆடாமல் அமைதியான இன்னிங்ஸை விளையாடினார். இது ஒரு ஆரவாரமான இன்னிங்ஸாக இருக்கவில்லை.” என்று கூறி முடிக்கிறார்.