எந்த ஸ்பின்னரும் நெருங்க முடியாத சாதனை.. உலகக்கோப்பை குவாலிபயரில் புதிய ரெக்கார்ட் படைத்த வணிந்து ஹசரங்கா!

0
9441

உலகக்கோப்பை குவாலிஃபையர் லீக் சுற்று மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்திருக்கிறார் இலங்கை சுழல் பந்துவீச்சாளர் வணிந்து ஹசரங்கா.

ஜிம்பாப்வேயில் பரபரப்பாக உலகக்கோப்பை குவாலிபயர் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய தினம் நடைபெற்ற லீக் போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இலங்கை மற்றும் அயர்லாந்து இரு அணிகளும் மோதிக்கொண்டன. இதில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

துவக்க வீரர் கருநரத்தினே அபாரமாக சதம் அடித்து, 103 ரன்களுக்கு அவுட் ஆனார். சமரவிக்ரமா 82 ரன்கள், தனஜெயா டி செல்வா 42* ரன்கள் அடித்துக் கொடுக்க, 49.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆன இலங்கை அணி 325 ரன்கள் அடித்தது.

இலக்கை துரத்திய அயர்லாந்து அணிக்கு வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து வந்தன. ஹேரி டக்கர் 33 ரன்கள் மற்றும் கேம்பர் 39 ரன்கள் அடித்தனர். இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்த டாக்ரேல் 26 ரன்கள் அடித்திருந்தார்.

மற்ற வீரர்கள் பேட்டிங்கில் போதிய பங்களிப்பை கொடுக்காததால், 31 ஓவர்களில் 192 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது அயர்லாந்து அணி. இதன் மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி. அபாரமாக பந்துவீசிய வணிந்து ஹசரங்கா இப்போட்டியிலும் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு முன்னர் நடைபெற்ற ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள், ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் என தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஐந்து பிளஸ் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஸ்பின்னர் எனும் வரலாறை படைத்திருக்கிறார்.

மூன்று போட்டிகளில் மொத்தம் 16 விக்கெடுகளை கைப்பற்றி, தொடர்ச்சியாக விளையாடிய மூன்று போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஸ்பின்னர் எனும் புதிய வரலாறை படைத்தார்.

அத்துடன் சர்வதேச ஒருநாள் போட்டிகள் வரலாற்றில், தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஒட்டுமொத்த வீரர்களில் இரண்டாவது வீரர் ஆவார். பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் தொடர்ந்து 3 போட்டிகளில் 5/11, 5/16, 5/52 என கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக இந்த சாதனையை நிகழ்த்தினார். இவர் 15 விக்கெட்டுகளை எடுத்தார். ஹசரங்கா 16 விக்கெட்டுகளை எடுத்தது மற்றுமொரு சாதனையாக அமைந்துள்ளது.