மும்பை வான்கடே மைதானத்தில் இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் மும்பை இந்தியன்ஸ் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது!
டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்தில் 124 ரன்கள் குவித்து அணி 20 ஓவர்களில் ஏழு விக்கட்டுகள் இழப்புக்கு 212 ரன்கள் குவிக்க உதவி செய்தார்.
தொடர்ந்து விளையாடிய மும்பை அணிக்கு கேமரூன் கிரீன் 44, சூரியகுமார் யாதவ் 52 என இடையில் நல்ல பங்களிப்புகள் வந்தது.
ஆனாலும் கடைசி நான்கு ஓவர்களுக்கு ஓவருக்கு 14 ரன்களுக்கு மேல் அடிப்பதாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19ஆவது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.
இந்த நிலையில் ஆட்டத்தின் இறுதியில் ஹோல்டர் வீசிய ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளை சந்தித்த டிம் டேவிட் மூன்று அபாரமான சிக்ஸர்களை தொடர்ந்து அடித்து மும்பை அணியை வெற்றி பெற வைத்தார்.
வெற்றிக்குப் பின் பேசிய டிம் டேவிட்
” எங்களுக்கு ஒரு ரிசல்ட் தேவைப்பட்டது. இது ஒரு அற்புதமான உணர்வு. இந்த மைதானத்தில் விளையாடுவதை விட சிறப்பான உணர்வு வேறு எதுவும் கிடையாது. கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனால் இது நன்றாக இருக்கிறது.
எல்லா பந்துவீச்சாளர்களையும் உணர்ந்து எல்லோரையும் குறி வைத்துதான் ஆகவேண்டும். ஆட்ட சூழ்நிலை அப்படித்தான் இருந்தது. தனிப்பட்ட முறையில் நான் இப்படி ஒரு ஆட்டத்தை விளையாட விரும்பினேன்.
நிறைய வியர்த்து கொட்டியது. கிரீசில் இருந்து இறங்கி பந்தின் ஆங்கிளை கட் பண்ண முயற்சி செய்தேன். பவுலர்கள் யார்க்கரை எப்போது கொஞ்சம் தவறவிட்டாலும் நமக்கு வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!






