நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் செயல்பட்ட விதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி தங்களது சொந்த மைதானத்தில் 169 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மிகச் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் நான்கு ஓவரில் 19 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட் வீழ்த்தினார். குறிப்பிட்ட இந்த மைதானத்தில் அவருடைய சிறந்த பந்துவீச்சாக இது பதிவானது.
சிராஜ் வாழ்க்கையில் முதல் முறை
சிராஜ் கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய மட்டத்தில் அவர் தொடர்ந்து செயல்படுவதற்கு மிகப்பெரிய உதவி செய்தவராக ஆர் சி பி மற்றும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் அவருடைய செயல்பாடுகள் சுமாராக இருந்த போதிலும் கூட விராட் கோலி அவரை அடுத்தடுத்து தொடர்ந்து நிறுத்தி வைத்து வாய்ப்புகள் கொடுத்தார். மேலும் இந்திய அணிக்கு தேர்வாகவும் உதவி செய்தார்.
இந்த நிலையில் விராட் கோலி மீது சிராஜ் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். அதே சமயத்தில் அவருக்கு எதிராக எங்கும் இதுவரை சிராஜ் பந்து வீசியது கிடையாது. இந்த நிலையில் ஆர்சிபி நிர்வாகம் தன்னை அணியில் இருந்து கழட்டி விட்டதால் தற்போது குஜராத் அணியில் இணைந்து, அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முறையாக விராட் கோலிக்கு எதிராக நேற்று பந்து வீசினார். அந்த பந்தை விராட் கோலி பவுண்டரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிராஜ் எல்லோருக்கும் காட்ட நினைக்கிறார்
சிராஜ் குறித்து பேசி இருக்கும் சேவாக் கூறும்பொழுது “அவர் சின்னசாமி மைதானத்தில் நேற்று அவருடைய சொந்த சாதனையை படைத்துக் கொண்டார். முதல் மூன்று ஓவர்களில் 12 அல்லது 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். தொடர்ந்து நான்காவது ஓவர் வீசி அவர் மேலும் இன்னொரு விக்கெட் கைப்பற்றி இருக்க முடியும். நேற்று அவர் பந்தை நன்றாக ஸ்விங் செய்தார். மேலும் ஆடுகளத்தை மிகச் சிறப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார்”
இதையும் படிங்க : 7 வருட பிணைப்பு.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன்.. ஆனா பந்தை கையில் தொட்டதும் நிலைமை மாறுச்சு – சிராஜ் பேட்டி
“அவரிடம் இன்னும் அந்த நெருப்பு இருக்கிறது. மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம்பெறாததால் அது அவரை காயப்படுத்தி இருப்பதாக நான் உணர்கிறேன். இது அவருக்குள் தீயை ஏற்படுத்தி இருக்கிறது, அதை நான் நேற்று பார்த்தேன். ஒரு இளம் வேகப்பந்துவீச்சாளரிடம் நாம் எதிர்பார்ப்பது இதைத்தான். நீங்கள் என்னை தேர்வு செய்யவில்லையா இதோ நான் யார் என்று காட்டுகிறேன் என்று காட்டியிருக்கிறார். மேலும் இதே தீவிரத்துடன் அவர் மீண்டும் இந்திய அணிகளும் நுழைவார் என்று தோன்றுகிறது” என தெரிவித்திருக்கிறார்.






