பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் பாபர் அசாம் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
பாபர் அசாம் கேப்டன் பொறுப்பில் இருந்து கீழ் இறங்கிய பிறகு, பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியில் அவரை மூன்றாவது இடத்தில் விளையாட வைக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் அவர் கேப்டன் ஆன பிறகு துவக்க வீரராக வந்தார். தற்பொழுது கடந்த இரண்டு போட்டிகளாக அவர் மீண்டும் மூன்றாவது இடத்திற்கு தன்னை கீழே இறக்கிக் கொண்டிருக்கிறார்.
பாபர் அசாம் எந்த நிலையில் பேட்டிங் செய்தாலும் கூட அவரிடமிருந்து அதிரடியான தாக்கம் தரக்கூடிய பேட்டிங்கை பார்க்க முடிவதில்லை. குறைந்த இலக்கை துரத்தும் பொழுது மட்டுமே, அவருடைய பேட்டிங் அணிக்கு பயன்படுவதாக இருக்கிறது. பெரிய இலக்கை செட் செய்யவோ அல்லது துரத்தவோ அவரது பேட்டிங் பயன்படுத்துவதில்லை.
மேலும் பாபர் அசாம் இதுவரையில் துவக்க வீரராக டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் பவர் பிளேவில் ஒரு சிக்ஸர் கூட அடித்தது கிடையாது. மேலும் பவர் பிளேவில் டி20 உலக கோப்பை தொடரில் ஒட்டுமொத்தமாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 100க்கும் கீழே இருக்கிறது. எனவே ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியை தாண்டி பாபர் அசாம் மீது தனிப்பட்ட முறையில் நிறைய விமர்சனங்கள் இருக்கிறது.
இதுகுறித்து வீரேந்திர சேவாக் பேசும்பொழுது ” பாபர் அசாம் சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரர் கிடையாது. அவர் செட் ஆன பின்போ அல்லது சுழல் பந்துவீச்சாளர்கள் வந்த பின்பு சிக்ஸர் எப்பொழுது ஆவது அடிப்பார். கால்களைப் பயன்படுத்தி வேகுபந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரால் சிக்ஸர்களை அடிக்க முடியாது. தரையில் அடிப்பதன் மூலமாக பாதுகாப்பான முறையில் அவர் ரன்கள் எடுக்கிறார். மேலும் அவர் பெரிய சிக்சர்கள் அடித்து நான் பார்த்தது கிடையாது. அவருடைய ஸ்ட்ரைக் ரேட் பெரிதாக இல்லை.
இதையும் படிங்க : ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்காகவும் நானே விளையாட முடியாது.. பாகிஸ்தான் நல்ல டீம் இல்ல – பாபர் அசாம் பேட்டி
ஒரு கேப்டனாக அவருடைய பேட்டிங் அணிக்கு பயன்படுகிறதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். இப்படி அவருடைய மெதுவான பேட்டிங் பயன்படவில்லை என்றால் அவர் தன்னை வேகப்படுத்திக் கொண்டு 50, 60 ரன்கள் பவர் பிளவில் வரும்படி விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை பாபர் அசாம் டி20 கிரிக்கெட்டுக்கு தகுதியற்றவர். அவர் கேப்டனாக இருப்பதால் மட்டுமே பாகிஸ்தான் டி20 அணியில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.