“ஆசிய கோப்பையில் பாபர் அசாமை தாண்டி விராட் கோலி பெருசா செய்ய மாட்டார்” – ஆஸ்திரேலிய வீரர் அதிரடி கருத்து!

0
1151
Virat

சமகால கிரிக்கெட்டில் இந்திய அணியின் ரன் மிஷின் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் இருவரும் தங்களது பேட்டிங் திறமையின் காரணமாக ஒப்பிடப்பட்டு வருகிறார்கள்!

விராட் கோலி தற்கால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிகக் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்துள்ள 49 சதங்களை முறியடிப்பதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறார்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் சீராக ரன்களை எடுத்து வருவதில் விராட் கோலிக்கு நெருக்கமாக இருக்கிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு நல்ல சராசரி இருக்கிறது. இருவருக்கும் இருக்கும் வித்தியாசம், விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் பாபரை விட நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் குறைந்தபட்சம் இரண்டு முறை மோதிக் கொள்வதற்கான வாய்ப்பில் இருக்கின்றன. எனவே இந்த தொடர் குறித்தும், விராட் கோலி பாபர் ஆசமை ஒப்பிட்டும் நிறைய கருத்துக்கள் முன்னாள் வீரர்களிடமிருந்து வருகிறது.

இவர்கள் இருவர் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி இருவரும் சுவாரசியமான ஒரு விவாதத்தில் ஈடுபட்டார்கள். அதில் டாம் மூடி விவாதத்தை மேலும் சூடாக்கும்படியான ஒரு கருத்தை வெளியிட்டு பேசியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து டாம் மூடி பேசும் பொழுது
“விராட் கோலியுடன் ஒப்பிடப்படும் அளவுக்கான வீரராக நிச்சயம் பாபர் ஆஸம் இருக்கிறார். அவர் எனக்கு விராட் கோலியை நினைவூட்டுகிறார். அவர் மரபான கிரிக்கெட் ஷாட்களை விளையாடுகிறார். அவர் நன்கு புரிதலோடு, ஆட்டம் பற்றி தெளிவாக இருக்கிறார். இது விராட் கோலி கடந்த பத்து வருடங்களாக செய்து வருவது.

பாபர் ஆஸம் இலக்கை துரத்துவதில் விராட் கோலியை போன்று திறமையானவர். விராட் கோலி இதை பல வருடங்களாக செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நிறைய ஒற்றுமை உள்ளது. ஆனாலும் பாபரை தாண்டி இந்த ஆசியக் கோப்பையில் விராட் கோலி மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் இவர்கள் இருவருக்கும் சமமான அழுத்தம் இருக்கும். இவர்கள் இருவரும் எப்படி செயல்படுவார்கள் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன்.

ஆசியா அணிகளுக்கு கேப்டனாக இருப்பது எப்பொழுதும் மிக சவாலான விஷயம். எப்பொழுதும் ஒரு கேப்டன் மீது மைக்ரோஸ்கோப் இருந்து கொண்டே இருக்கும். ஏதாவது கேப்டன் தரப்பில் நகர்வில் சிறு தவறுகள் ஏற்பட்டாலும், பல கிரிக்கெட் நிபுணர்கள் உடனே உருவாகிவிடுவார்கள். ஆனாலும் இந்த அழுத்தத்தின் கீழும் பாபர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்!” என்று நான் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!