விராட் கோலி நாளை இந்த விஷயத்தை கண்டிப்பாக செய்வார்” – சுனில் கவாஸ்கர் கணிப்பு!

0
4058

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 36 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது.

இன்று மூன்றாவது நாள் ஆட்டத்தை சிறப்பாக தொடங்கி ஆடிய இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மண் கில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு உறுதுணையாக நின்று ஆடிய சத்தீஸ்வர் புஜாரா 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார். அவருடன் ரவீந்திர ஜடேஜா 16 ரன்களில் களத்தில் உள்ளார். இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 289 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் 191 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு நாட்கள் மீதம் உள்ளன.

- Advertisement -

இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த அரைச்சதம் 14 மாதங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் அரை சதமாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு கேப் டவுன் நகரில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்திருந்தார். 16 இன்னிங்ஸ்களுக்கு பிறகு தற்போது தான் அவர் அரை சதம் அடித்திருக்கிறார். இந்நிலையில் விராட் கோலி இந்த அரை சதத்தை மிகப்பெரிய ஒரு சதமாக மாற்றுவார் என்று தனது கணிப்பை தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பிரபலமான கிரிக்கெட் விமர்சகர்மான சுனில் கவாஸ்கர்.

இன்றைய நாள் ஆட்டத்திற்கு பின் நடைபெற்ற வர்ணனையாளர்களுக்கான கலந்துரையாடலில் பேசிய கவாஸ்கர் விராட் கோலி இன்று மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் எவ்வாறான தன்மையை கொண்டிருக்கிறது என்பதை நேரமெடுத்து நன்கு ஆராய்ந்து அதன் பிறகு தன்னுடைய ஷாட்களை விளையாடியதாக குறிப்பிட்டார். மேலும் விராட் கோலி இடமிருந்து மிகப்பெரிய ஒரு சதத்தை இந்த போட்டியில் தான் எதிர்பார்ப்பதாக கூறினார். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை விட முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பேட்டியில் பேசிய கவாஸ்கர்” ஆடுகளத்தின் தன்மையை அறிந்து விராட் கோலி இன்று ஆடி அரை சதம் அடித்த விதம் சிறப்பாக இருந்தது. அவர் இந்த அரை சதத்தை ஒரு இரட்டை சதமாக மாற்றுவார் என்று நான் நினைக்கிறேன். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று இந்த டெஸ்ட் போட்டியை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சிறப்பாக இருக்கிறது”எனக் கூறினார்.

- Advertisement -

மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய கவாஸ்கர் விராட் கோலி ரன் பசியோடு இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே. அவருக்கு இதுவரை ஒரு அரை சதம் கூட கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் அவர் ஒரு அரை சதத்தை எட்டி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடிக்கவில்லை. அதற்குப் பரிகாரமாக இந்த அரை சதத்தை 250 ரன்கள் ஆக மாற்றுவதே சிறந்தது” எனக் கூறி முடித்தார் கவாஸ்கர்.