பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் முடிவில் விராட் கோலி துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்து வெளியேறியது எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் இரண்டாவது நாளில் 376 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துவங்கிய பங்களாதேஷ் அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இந்திய அணி 227 ரன்கள் முன்னிலை பெற்றது.
மீண்டும் ஏமாற்றிய பெரிய தலைகள்
இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே பெரிய ரன்கள் எடுக்காமல் ஏமாற்றம் தந்தார்கள். இதன் காரணமாக ஆடுகளத்தின் சூழ்நிலையை உணர்ந்து விட்டதால் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்திய அணிக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா 5, ஜெய்ஸ்வால் 13 விராட் கோலி 17 என சொற்ப ரன்களில் மீண்டும் ஏமாற்றம் தந்து வெளியேறினார்கள். ஆனால் இதில் விராட் கோலி வெளியேறிய விதம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் அல்லாமல் பெரிய அதிர்ச்சியையும் கோபத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
உணராத விராட் கோலி கவிழ்த்திய கில்
விராட் கோலி மெகதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் ஒரு பவுண்டரி அடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த பந்தை பவுலர் ஃபுல் லென்த்தில் மேலே வீச, விராட் கோலி அதை ரன்னுக்கு விளையாட முயற்சி செய்து காலில் வாங்கினார். பங்களாதேஷ் அணியினர் நடுவரிடம் முறையிட நடுவர் அவுட் என அறிவித்தார்.
இந்த நிலையில் ரிவ்யூக்கு செல்லலாமா என விராட் கோலி கில் இடம் கேட்டார். கில் பேட்டில் பட்டதா? என்று கேட்க, விராட் கோலி சரியாக தெரியவில்லை என்று சொல்ல, கில் ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று விராட் கோலியிடம் சொல்லிவிட்டார். இதனால் விராட் கோலி ஆட்டம் இழந்து பெவிலியன் சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: 308 ரன்.. ஒரே நாளில் 17 விக்கெட்.. பங்களாதேஷ் அணியை சுருட்டி இந்தியா முன்னிலை.. வெற்றி வாய்ப்பு பிரகாசம்
இதற்குப் பிறகு ரீப்ளேவில் பார்க்கும் பொழுது விராட் கோலியின் பேட்டில் பந்து பட்டது தெளிவாகத் தெரிந்தது. ரிவ்யூ சென்று இருந்தால் விராட் கோலி தப்பித்திருக்க முடியும். ஆனால் கில் மேற்கொண்டு ரிவ்யூ கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டதால், விராட் கோலிக்கும் பேட்டில் பட்டதா இல்லையா? என்று உறுதியாக தெரியாததால் பரிதாபமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதுதான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை விட கோபத்தை அதிக அளவுக்கு உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.