தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி இரண்டாம் கட்ட போட்டியில் டெல்லி அணிக்காக களம் இறங்கிய விராட் கோலி மீண்டும் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்து வெளியேறி இருக்கிறார்.
கடந்த வாரங்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஓய்வில் இருக்கும் இந்திய வீரர்கள் மற்றும் காயம் இல்லாத இந்திய வீரர்கள் அனைவரும் இந்திய உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என கட்டளையிட்டது. இதன்படி தற்போது விராட் கோலி டெல்லி அணிக்காக ரயில்வே அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் களம் இறங்கினார்.
எதிர்பார்க்காத அளவு கூட்டம்
விராட் கோலி பன்னிரண்டு வருடங்கள் கழித்து தனது மாநில அணியான டெல்லி அணிக்கு களம் இறங்குகின்ற காரணத்தினால், அவரைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக ரஞ்சி டிராபி போட்டி நடைபெறும் டெல்லி மைதானத்தில் ரசிகர்கள் குவிந்தனர். மைதானம் முழுவதும் நேற்றிலிருந்து நிறைந்து காணப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி நேற்றைய முதல் நாளில் 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி ஒரு விக்கெட் மட்டுமே இழந்த காரணத்தினால் நேற்று விராட் கோலி பேட்டிங் செய்ய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இன்று விராட் கோலி நிச்சயம் பேட்டிங் செய்ய வருவார் என்பதால் கூட்டம் மேலும் அதிகரித்தது.
ஏமாற்றம் தந்த விராட் கோலி
இன்று டெல்லி அணி இரண்டாவது விக்கெட்டை இழந்ததும் ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் விராட் கோலி களம் இறங்கினார். தற்போது ரஞ்சி டிராபியில் விளையாட வந்த இந்திய வீரர்களில் கில் மட்டுமே பஞ்சாப் அணிக்காக ஒரு சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் என அனைவருமே ஏமாற்றம் கொடுத்திருந்தார்கள்.
இதையும் படிங்க : ஜூரல் எட்டாவது இடத்தில வந்தது சரிதான்.. கம்பீர் கிட்ட அதுக்கான நியாயம் இருக்கு – இந்திய துணைப் பயிற்சியாளர் பேட்டி
இப்படியான நிலையில் விராட் கோலி ஆட்டம் இழந்த ஓவரில் அதிரடியாக ஒரு பவுண்டரியை அடித்தார். மீண்டும் அதே லைன் லென்த்தில் ஒரு பந்து கிடைக்க பவுண்டரி அடிப்பதற்கு மீண்டும் சென்ற பொழுது அவரது டைம் தவறியது. இதன் காரணமாக விராட் கோலி கிளீன் போல்ட் ஆனார். ரசிகர்கள் பெரிய அளவில் ஏமாற்றம் அடையும் வகையில் ஸ்டெம்புகள் கீப்பரிடம் பறந்தது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மைதானத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆரம்பித்திருக்கிறார்கள். அதே சமயத்தில் ரயில்வேஸ் அணியினர் விராட் கோலிக்கு மரியாதை தந்து அவரது விக்கெட்டை கொண்டாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது!